ADDED : அக் 07, 2024 01:07 AM
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராகப் பணியாற்றிய பவன்குமார் அண்மையில், பொதுத்துறை துணை செயலாளராக பதவி உயர்வு பெற்று, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக இது வரை கமிஷனர் பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கு இரு உதவி கமிஷனர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மாநகர பொறியாளர் பணியிடம் கடந்த சிலமாதமாக காலியாக உள்ளது. துணை மாநகரப் பொறியாளர் இப்பணியைக் கூடுதலாக மேற்கொண்டுள்ளார். பொறியியல் பிரிவில் தற்போது மொத்தம் ஆறு பேர் மட்டுமே இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இப்பணியிடங்களில் குறைந்த பட்சம் 30 பேர் என்ற அளவிலாவது இப்பணியிடங்களில் அலுவலர்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். வளர்ச்சிப் பணிகள், கட்டுமானம், குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, நகரமைப்பு, நகர அளவைப் பிரிவு, வருவாய் பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளிலும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
மக்கள் தொடர்பு அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு எட்டு மாதங்களாகிறது. இதுவரை அப்பணியிடமும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.
இதனால், பணிகளில் பெரும் தொய்வு நிலை காணப்படுகிறது. வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்தல், புதிய பணிகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்தல், குடிநீர் வினியோகம் கண்காணித்தல், தெரு விளக்கு பராமரிப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் அலுவலர் பற்றாக்குறையால் பெரும் சுணக்கம் காணப்படுகிறது.
தற்போது 60 வார்டுகளுடன் 4 மண்டலங்களாக உள்ள மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. நாளுக்கு நாள் மக்களின் தேவைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு ஆகியன கவனமாக கண்காணித்து பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கமிஷனர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.