sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மன்னிக்க முடியாத மாபாதக செயல்... திருப்பூரில் ஆசிரியர்கள் குமுறல்

/

மன்னிக்க முடியாத மாபாதக செயல்... திருப்பூரில் ஆசிரியர்கள் குமுறல்

மன்னிக்க முடியாத மாபாதக செயல்... திருப்பூரில் ஆசிரியர்கள் குமுறல்

மன்னிக்க முடியாத மாபாதக செயல்... திருப்பூரில் ஆசிரியர்கள் குமுறல்


ADDED : நவ 21, 2024 11:58 PM

Google News

ADDED : நவ 21, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதநேயம் மரித்து போனதோ...

மாண்டவர் நெஞ்சம் என்ன பாடுபட்டதோ!

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை



தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியர் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. பள்ளிக்குள்ளேயே ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக, குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

கடந்த, 20ம் தேதி, தஞ்சாவூர், மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ரமணி, 24. வாலிபர் ஒருவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குத்திக்கொலை செய்யப் பட்டதற்கு, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. நேற்று, திருப்பூர் மாவட்டத்தின் சில அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள், கருப்பு பேட்ஜ், கருப்புசட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

சட்டம் வேண்டும்


மருத்துவர்களுக்கு உள்ளது போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கட்டாயம் இயற்ற வேண்டும். ஆசிரியர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்பதை உறுதி செய்ய கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். தனிநபர் பிரச்னையாகவே இருந்தாலும், பள்ளி வளாகத்துக்குள், யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்ற நிலை உள்ளது. பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

- கனகராஜ் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் தெற்கு வட்டார கிளை செயலாளர்

பாதுகாப்பற்ற சூழல்


ஆசிரியர் கொலை நடந்த அரசு பள்ளியில் கேட் கிடையாது; பாதுகாவலர் இல்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் இவ்வாறு பாதுகாப்பற சூழலே உள்ளது. பொதுவாக தமிழ் ஆசிரியருக்கு முதல் பாடவேளை இருப்பதில்லை. இதனால், ஆசிரியர் ஓய்வறையில் இருந்துள்ளார். வகுப்புக்கு சென்றிருந்தால், வகுப்பிலே கொலை நடந்திருக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆசிரியர்களுக்கு உள்ளது. தமிழக அரசு தாமதிக்காமல், ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்ப முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெயராஜ் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்

உகந்தது அல்ல


ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உறுதி செய்ய வேண்டும்; வாட்ச்மேன் இல்லாத நிலை உள்ளது. ஓய்வறைக்கு சென்று தாக்குதல் நடந்துள்ளது. பள்ளிகளில் சமூக விரோத செயல்கள் நடப்பது, மாணவரின் எதிர்காலத்துக்குள் உகந்தது அல்ல. இது போன்ற சம்பவங்களால் ஆசிரியர்களும், மாணவர்களும் மனரீதியான பாதிக்கப்படுகின்றனர். அச்சத்தில் உறைகின்றனர். ஆசிரியர்களும் தங்கள் சொந்த பிரச்னைகள் பள்ளிக்குள் எப்போதும் கொண்டு வரக்கூடாது. நம் மாணவரோடு ஒன்றிணைந்து இருப்பதால், அது அவர்களது மனநிலையையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். இப்படியே சென்றால் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.

- பாலசுப்ரமணி தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

மன்னிக்க முடியாது...


பள்ளி வளாகத்தில் ஆசிரியர் படுகொலை சக ஆசிரியர்களின் மனதில் தாங்கொணாத் துயரத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னிக்க முடியாத மாபாதகச் செயலைச் செய்த கொலையாளிக்கு தமிழக அரசு கடுந்தண்டனை வழங்கிட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்தில் படித்தவர்கள் இருந்தால் அரசு பணி வழங்கிட வேண்டும். நாளைய சமுதாயத்தை, இளம் தலைமுறையை உருவாக்கும் சிற்பிகளான ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பினை உறுதி செய்து தமிழக அரசு உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும். இது போன்ற குற்றச் செயல் புரிவோருக்குத் தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும். விடியல் ஒளிகளை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்கள் தாக்கப்படுவது, படுகொலை செய்யப்படுவது ஏற்கக் கூடியதாக இல்லை.

- சுந்தரமூர்த்தி விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர்

அவலம் மாறணும்...


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மதிப்பு மிக்க பாரம்பரியத்தை, அறுத்து எறிந்ததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம். பட்ட பகலில், பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை கொலை செய்யப்படுகிறார் என்றால், ஆசிரியர் சமூகத்துக்கு என்ன பணி பாதுகாப்பு இருக்கிறது. சமூகத்தை நெறிபடுத்துகின்ற கோவில்களான பள்ளிகளிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியாக உள்ளது. ஒரு ஆசிரியர், சமூக விரோதிகளுக்கும் மாணவர்களுக்கும் பயந்து பள்ளிக்கு வரும் ஒரு நிலை அவருக்கு ஏற்படுமானல், அவரால் எப்படி தன் எண்ணி வந்ததை மாணவர்களுக்கு முழுமையாக கற்பிக்க இயலும். ஆசிரியர்களுக்கு பணி சுதந்திரமும், பணி பாதுகாப்பு சட்டமும் அவசியம் தேவை என்பது இனிமேலாவது அரசு உணர வேண்டும்.

- பழனிசாமி (பணி நிறைவு) தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர்

மோசமான சூழல்


ஆசிரியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஆசிரியர் பணிக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழலை ஊர்ஜிதப்படுத்துபவையாக உள்ளது. பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தொடர்ந்து செவிசாய்க்காமல் அரசு இருந்து வருகிறது. ஆசிரியர் கொலை சம்பவத்தை கண்டித்து, கண்டனத்தை தெரிவிக்க, கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று (நேற்று) பணியாற்றினோம்.

- கோபாலகிருஷ்ணன் தேசிய ஆசிரியர் சங்க கோட்ட செயலாளர்

கண்டனத்துக்குரியது


இளம் தலைமுறையான மாணவ சமுதாயத்தை ஒழுக்கமுள்ளவர்களாக உருவாக்க பாடுபடும் ஆசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கிறது. வேதனைக்குரிய இவ்விஷயத்தை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களை தாக்குவோர், தாக்க முயற்சிப்போருக்கு கடும்தண்டனை விதித்தால் தான் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடாது.

- ஆழ்வைக்கண்ணன் தமிழாசிரியர்

கேமரா பொருத்த வேண்டும்


எழுத்தறிவிப்பவன் இறைவன் என்பார்கள். இறைவனுக்கு இணையான ஆசிரியர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற சூழல் மிகுந்த அச்சமூட்டுவதாக உள்ளது. ஆசிரியர்களை எங்கு பார்த்தாலும் கையெடுத்து வணங்கும் நிலை மாறி, கையில் ஆயுதத்தை ஏந்தும் நிலை உள்ளது. ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பகல் மற்றும் இரவு காவலர்களை நிரந்தரமாக நியமித்து, பள்ளி வேலை நேரத்தில் தலைமையாசிரியர் அனுமதியில்லாமல் மாணவர்களையோ, மற்ற ஆசிரியர்களையோ யாரும் சந்திக்க அனுமதி வழங்க கூடாது.

ஒவ்வொரு பள்ளியிலும் பெரிய வாயில் கதவு தவிற ஒரு நபர் மட்டும் நுழையக் கூடிய அளவிலான சிறிய வாயிற்கதவு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். பள்ளி தொடங்கி முடியும் வரை பெரிய வாயில்கதவு பூட்டப்பட்டு அதன் சாவி தலைமையாசிரியரிடம் இருக்க வேண்டும். கூட்டமாக, யாரும் உள்ளே செல்வதை தடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் அரசே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

- கவுதமன் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர் சங்கம், மாநில தலைவர்

கேமரா பொருத்த வேண்டும்


எழுத்தறிவிப்பவன் இறைவன் என்பார்கள். இறைவனுக்கு இணையான ஆசிரியர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற சூழல் மிகுந்த அச்சமூட்டுவதாக உள்ளது. ஆசிரியர்களை எங்கு பார்த்தாலும் கையெடுத்து வணங்கும் நிலை மாறி, கையில் ஆயுதத்தை ஏந்தும் நிலை உள்ளது. ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பகல் மற்றும் இரவு காவலர்களை நிரந்தரமாக நியமித்து, பள்ளி வேலை நேரத்தில் தலைமையாசிரியர் அனுமதியில்லாமல் மாணவர்களையோ, மற்ற ஆசிரியர்களையோ யாரும் சந்திக்க அனுமதி வழங்க கூடாது.

ஒவ்வொரு பள்ளியிலும் பெரிய வாயில் கதவு தவிற ஒரு நபர் மட்டும் நுழையக் கூடிய அளவிலான சிறிய வாயிற்கதவு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். பள்ளி தொடங்கி முடியும் வரை பெரிய வாயில்கதவு பூட்டப்பட்டு அதன் சாவி தலைமையாசிரியரிடம் இருக்க வேண்டும். கூட்டமாக, யாரும் உள்ளே செல்வதை தடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் அரசே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

- கவுதமன் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர் சங்கம், மாநில தலைவர்






      Dinamalar
      Follow us