/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரந்தர கண்காட்சி வளாகம் நிறைவேறாத எதிர்பார்ப்பு
/
நிரந்தர கண்காட்சி வளாகம் நிறைவேறாத எதிர்பார்ப்பு
ADDED : ஆக 10, 2025 11:04 PM

திருப்பூர், ; திருப்பூரில் நிரந்தர கண்காட்சி வர்த்தக மையம் அமைய வேண்டும் என்ற தொழில்துறையினரின் 20 ஆண்டுகால கனவு, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பின்னலாடைத் தொழிலில் கோலோச்சுகிறது திருப்பூர்; தொழிலுக்கு தேவையான தொழில்நுட்பங்களை அறியவும், செயல்படுத்தவும், வெளிநாடுகளில் நடந்த கண்காட்சிகள் பேருதவியாக இருந்தன. இதற்கு அதிகம் செலவழிக்க வேண்டும் என்பதால், சில நிறுவனத்தினர் மட்டும், வெளிநாடு சென்று, புதிய இயந்திரங்களை வாங்கி வந்து பயன்படுத்தினர்.
இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனத்தினர் பங்கேற்கும் வகையில், திருப்பூரில் கண்காட்சிகள் கடந்த கால் நுாற்றாண்டு காலத்துக்கு மேலாக நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை 'நிட்ேஷா' கண்காட்சியும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'நிட் -டெக்' கண்காட்சியும்; ஜவுளித்துறையினருக்காக, ஆண்டுக்கு இருமுறை, 'இந்தியா நிட்பேர்' கண்காட்சியும், நுாலிழை மற்றும் துணி ரகங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை, 'யார்னெக்ஸ்' கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
பின்னலாடை கண்காட்சிக்காகஉருவான ஐ.கே.எப்., வளாகம் ஏற்றுமதியாளர்கள் அங்கம் வகிக்கும் ஐ.கே.எப்., அசோசி யேஷன் மூலம், கண்காட்சி நடத்துவதற்காக, ஐ.கே.எப்., வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஜவுளி கண்காட்சிகள் நடத்தும் அளவுக்கு போதிய இடவசதியுள்ளது. இருப்பினும், பெரிய இயந்திரங்களை நிறுவி தொழில்நுட்ப கண்காட்சி நடத்த போதிய இடவசதி இல்லை.
கோவை 'கொடி சியா'வில் இருப்பது போல், திருப்பூரில் நிரந்தர கண்காட்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பின்னலாடை இயந்திரக் கண்காட்சி போன்றவற்றை நடத்த கடும் சிரமங்களை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
தனியார் இடத்தில் தற்காலிக 'ெஷட்' இரும்பு ஆங்கிள்கள் பொருத்தி, கெட்டியான பாலிதீன் போன்ற தார்பாய்களை போர்த்தி அமைக்கப்படுகிறது. தரையை சமன்செய்து, தரைவிரிப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது. பெரிய இயந்திரங்களை 'கிரேன்' மூலம் பொருத்த வேண்டியிருப்பதால், 50 முதல், 70 அடி உயரத்தில், 'ெஷட்' அமைக்க வேண்டியுள்ளது.
அதற்கேற்ப மின்சார ஒயரிங் செய்வது, 'ஜெனரேட்டர்'களை பொருத்தி தயார்நிலையில் வைக்க, நுாற்றுக்கணக்கானோர், ஒரு மாதத்துக்கு மேலாக இரவு, பகலாக வேலை பார்க்கவேண்டியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சிக்காக, லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்து, 'ெஷட்' உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. திருப்பூரில், நிரந்தர கண்காட்சி மையம் அமைத்தால், கண்காட்சி நடத்தும் பணி எளிதாகும்; தொழில்துறையினரும் பயன்பெறுவர்.
தொழில் அமைப்பினர்
முன்வைக்கும் யோசனை
நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க, மத்திய, மாநில அரசுகளையே நம்பி காத்திருக்க வேண்டியுள்ளது. மாறாக, திருப்பூர் 3வது குடிநீர் திட்டம் போல், தனியார் மற்றும் அரசு கூட்டு திட்டம் மூலம், அரசு அல்லது தனியார் நிலத்தில், அரசு திட்டம் வாயிலாக, மாபெரும் கண்காட்சி வர்த்தக மையம் அமைக்கலாம்.
மத்திய அரசு திட்டத்தில், பொது பயன்பாட்டு மையம் அமைப்பது போல், மூத்த முன்னணி தொழில் அமைப்புகள் கூட்டாக இணைந்து, தொழில் கண்காட்சி வர்த்தக மையம் அமைக்கும் திட்டத்தை தயாரித்து, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற யோசனையை தொழில் அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
பிரமாண்ட வளாகம் அமைந்தால்
கண்காட்சி நாட்களை கூட்டலாம்
கோவை 'கொடிசியா' போல், திருப்பூரில் பிரமாண்டமான கண்காட்சி வளாகம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால், மூன்று நாள் என்பதை, ஐந்து நாள் கண்காட்சியாக நடத்தலாம்; ஆண்டுக்கு கோடிக் கணக்கான வருவாயும் பெறலாம்; கண்காட்சி நடத்தும் நிறுவனங்களின் சிரமங்கள் வெகுவாக குறையும்.
நிரந்தரமான, உயரமான கட்டடங்கள், தரையில் கேபிள்கள் பதிக்கப்பட்ட தரைத்தளம்; ஆங்காங்கே மின்சாரம், ஜெனரேட்டர் மற்றும் 'ஏசி' வசதிகளுடன் அமைக்கலாம். இது தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் விழாக்கள் நடத்தவும் பயன்படுத்தலாம். அரசு பொருட்காட்சி போன்ற, வீட்டு உபயோக பொருட்காட்சிகளும் நடத்தலாம். தொழிற்பூங்காக்கள் அமைப்பது போல், 'பிளக் அண்ட் பிளே' முறையில், அனைத்து ஏற்பாடுகளுடன் அமைக்க வேண்டும்.
- கண்காட்சி ஏற்பாட்டாளர்கள்.

