/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பட்ஜெட்: தொழில்துறையினர் கருத்துகள்
/
மத்திய பட்ஜெட்: தொழில்துறையினர் கருத்துகள்
ADDED : பிப் 02, 2025 01:14 AM

திருப்பூர்: மத்திய பட்ஜெட் குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கருத்துகள்:
நம்பிக்கை பிறந்தது
ராமசாமி, தலைவர், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கம்: பருத்தி உற்பத்திக்கான ஐந்தாண்டு திட்டம், ஜவுளித்தொழிலுக்கும், விவசாயத்துக்கும் ஊக்கமளிக்கும் அறிவிப்பு; விதை உற்பத்தி திட்டத்தால், நுால் பற்றாக்குறை எதிர்காலத்தில் இருக்காது; ஜவுளித்தொழில் மேம்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மாநில அரசுடன் இணைந்து சுற்றுலா மேம்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால், குறு, சிறு தொழில்கள் பயன்பெறும். சிறிய மற்றும் நடுத்தர அணுமின் நிலையம் அமைப்பதால், தொழில்துறை வளர்ச்சி பெறும்.
வரவேற்புக்கு உரியது
சண்முகம், தலைவர், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அறிவிப்புகளால், புதிய வளர்ச்சி ஏற்படுத்தும். ஏற்றுமதியில், 45 சதவீதம் குறு, சிறு தொழில்களில் இருந்து செல்கிறது.
விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து, பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பருத்தி விதை உற்பத்தி திட்டம் அறிவித்தது வரவேற்புக்குரியது. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தியதை யாருமே எதிர்பார்க்கவில்லை; மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். ஐ.டி., ஊழியர்கள், அரசு ஊழியர்களும் இதனால் பயன்பெறுவர்.
நேரடி அறிவிப்பு இல்லை
கோவிந்தசாமி, தலைவர், திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம்: மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டதால், நடுத்தர மக்கள் பயன்பெறுவர். 'எக்ஸ்ட்ரா லாங் ஸ்டேபிள்' பருத்தி உற்பத்திக்கான ஐந்தாண்டு திட்டம்; உதயம் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டம் உத்வேகம் அளிக்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அறிவிப்பு அதிகம்.
தோல் மற்றும் காலணி தொழில், 22 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்க அரசு முன்னெடுத்துள்ளது. எம்.எஸ்.எம்.இ., உச்சவரம்பு உயர்த்தியது வரவேற்புக்குரியது. சரிவர கையாண்டால், குறு, சிறு தொழில்களுக்கு சிறப்பான பட்ஜெட்டாக அமையும். பின்னலாடை தொழிலுக்கான நேரடி அறிவிப்பு இல்லாதது வருத்தமாக இருக்கிறது.
ஆடைத்துறை வளர்ச்சிக்கு ஊக்கம்
ஜெய்பிரகாஷ், வழிகாட்டி ஆலோசகர், மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம்: ஆயத்த ஆடைத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட்; ஆயத்த ஆடை துறைக்கு, அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அறிவிப்புகள், பின்னலாடை தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வருமான வரி திருத்தம், அனைவருக்கும் பயனளிக்கும். வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தில், 4.1 கோடி இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டம் உருவாக்க, இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மீது நம்பிக்கை
சவுந்தரராஜன், பொதுச்செயலாளர், எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம்: பின்னலாடை தொழிலுக்கு திறனுள்ள தொழிலாளர் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் தொழிலாளர்களை திறனுள்ளவர்களாக மாற்ற தொழில் துறையில் பல்வேறு சிறு சிறு முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் வேறு சில மாநிலங்களில் இருப்பது போல், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திருப்பூரில் தேவை என தொழில் நிறுவனங்கள் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் ஐந்து இடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். திருப்பூரில் பனியன் தொழிலை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை மத்திய அரசு அமைத்து தரும் என நம்புகிறோம்.
மகிழ்ச்சி தருகிறது
சிவக்குமார், தலைவர், தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்: மத்திய அரசு பட்ஜெட்டில், வரும் ஆண்டில் இருந்து, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு, வருமான வரி இல்லை என்ற அறிவிப்பால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர். குறு, சிறு தொழில் துவங்க, 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். மத்திய அரசின் பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறுவனங்களுக்கு பயன்
நாகேஷ், தலைவர், திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம்: மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம். எம்.எஸ்.எம்.இ., அளவில் மாறுதல் செய்ததால், அதிக நிறுவனங்கள் பயன்பெறும்; வணிகத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமான வரி உச்சவரம்பு உயர்வால், சேமிப்பு மற்றும் செலவினங்கள் ஊக்குவிக்கப்படும். வாடகை வருவாய்க்கான டி.டி.எஸ்., ஆறு லட்சமாக உயர்த்தப்பட்டதை வரவேற்கிறோம். புதுப்பிக்கப்பட்ட 'ரிட்டன்' தாக்கல் செய்ய, நான்கு ஆண்டுகள் வரை அவகாசம் நீட்டித்தது அதிக பயனளிக்கும்.
விசைத்தறிகள் மேம்படுத்த வேண்டும்
சின்னசாமி, விசைத்தறி உரிமையாளர்: சுற்றுலா துறைக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா துறை வாயிலான வருவாய் பெருகும். சுற்றுலா தலங்கள் மேம்படுத்துதல், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகள் அதிகரிக்கும். இது வரை இல்லாத வகையில் பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இதன் வளர்ச்சியை, 45 சதவீதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, விசைத்தறி தொழில் மேம் படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.