/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பட்ஜெட்: பொதுமக்கள் பேட்டி
/
மத்திய பட்ஜெட்: பொதுமக்கள் பேட்டி
ADDED : பிப் 02, 2025 01:16 AM

செந்தில்நாதன், திருமுருகன்பூண்டி:
தனி மனித வருமானத்துக்கு, 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கொடுத்துள்ளனர். இது யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அனைவரும் வரவேற்றுள்ளனர். எலக்ட்ரானிக் கார்கள், டூவீலர் ஆகியவற்றுக்கு வரி விலக்கு கொடுத்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வருமான வரியை ரத்து செய்துள்ளனர். 63 ஆண்டுகளாக மாறாமல் வைத்திருந்த பட்ஜெட் பல விஷயங்களை மாற்றும் முன்னெடுப்புக்கான அறிவிப்பு சிறப்பான ஒன்று. தொலை நோக்குடனான சிறப்பான பட்ஜெட்.
மோகன்குமார், கருவம்பாளையம்:
நடப்பாண்டு பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்பது வரவேற்கத்தக்கது. சிறு மற்றும் குறு நிறுவனங்களின் முதலீட்டு உச்சவரம்புகளை உயர்த்தி உள்ளதை வரவேற்கிறேன். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீட்டுக்கு, 20 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டம் வரவேற்க கூடியது. புதிய தொழில்களை துவங்க பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல சலுகைகள். வங்கிகள் எளிய முறையில் கடன் வழங்க விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் சிறு நிறுவனங்களுக்கு சில சலுகைகள் எதிர்பார்த்தோம். அது கிடைக்கவில்லை. பங்குதாரர்கள் நிறுவனத்துக்கு இரட்டை வரி விதிப்பு முறை நீக்கப்படும் என்று நம்பினோம். அது இந்த பட்ஜெட்டில் வரவில்லை.
கீதா, இல்லத்தரசி:
மத்திய அரசின் பட்ஜெட் பெண்களைக் கவரும் வகையில் உள்ளது. வருமான வரிக்கான உச்சவரம்பு, 12 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது வருமான வரி செலுத்துவோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பேட்டரி வாகனங்களுக்கு விலை குறைப்பு நடவடிக்கையானது மத்திய தரக்குடும்பங்களுக்கு பெரும் வரப்பிரசாதம். லித்தியம் பேட்டரிக்கு 100 சதம் வரி விலக்கு மூலம் இது சாத்தியமாகி உள்ளது. மொத்தத்தில், இது நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்.