/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருணை காட்டாத கோடை மழை தடைபட்ட மானாவாரி சாகுபடி
/
கருணை காட்டாத கோடை மழை தடைபட்ட மானாவாரி சாகுபடி
ADDED : மே 10, 2025 02:40 AM
பொங்கலுார், : மாசி முதல் வைகாசி வரை கோடை மழை காலம். மாசியில் மரம் தளைய மழை பெய்யும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. மாசி, பங்குனி மாதங்களில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் எள், கம்பு, தட்டை, திணை வரகு, சாமை முதலியவை சாகுபடி செய்வது வழக்கம். இவை சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் மழையில் அறுவடைக்கு வந்து விடும்.
பாசன வசதி உள்ள நிலங்களில் சித்திரை மாதத்தில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்வர். இதன் மூலம் நிலத்தில் உள்ள களைகள், பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படும். அடுத்து வரும் ஆடிப்பட்டத்திற்கு நிலத்தை தயார் செய்ய இது ஏதுவாக இருக்கும். காலநிலை மாற்றத்தால் கோடை மழை போதுமான அளவு பெய்யவில்லை. மாசி, பங்குனி மாதங்களில் நல்ல மழை இல்லாததால் பல இடங்களில் மானாவாரி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பெய்யும் கோடை மழையும் பரவலாக பெய்யவில்லை. சில இடங்களில் மட்டுமே பெய்துள்ளது. மழை பெய்த பகுதியில் மட்டும் கோடை உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் பல இடங்களில் கோடை உழவு செய்ய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.