/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பின்றி குப்பை அகற்றும் பணி; பொதுமக்கள் பாதிப்பு
/
பாதுகாப்பின்றி குப்பை அகற்றும் பணி; பொதுமக்கள் பாதிப்பு
பாதுகாப்பின்றி குப்பை அகற்றும் பணி; பொதுமக்கள் பாதிப்பு
பாதுகாப்பின்றி குப்பை அகற்றும் பணி; பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 14, 2025 08:01 PM
உடுமலை; உடுமலை, தாராபுரம் ரோட்டிலுள்ள குப்பை கிடங்கு, 'பயோ மைனிங்' முறையில் அகற்றும் பணியில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
உடுமலை, தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கரில் பழைய குப்பை கிடங்கு உள்ளது. இங்கிருந்த குப்பை, கழிவுகள் அகற்றப்படாமல், பல அடி உயரத்திற்கு தேங்கியிருந்தது.
இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும், தொடர்ந்து நகராட்சி மற்றும் பெரியகோட்டை ஊராட்சியில் சேகரமாகும், குப்பை, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.
அவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், புகை மூட்டமாக மாறி, அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும், என, 25 ஆண்டுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு தேங்கியுள்ள, 19 ஆயிரம் டன் கழிவுகளை, 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக அகற்ற, நகராட்சி திட்டமிட்டு, அதற்கு ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த, ஜன.,மாதம் முதல், தனியார் நிறுவனம் வாயிலாக இப்பணிகள் நடக்கிறது. இங்கு, 'பயோ மைனிங்' முறையில், கழிவுகள் நவீன இயந்திரங்கள் வாயிலாக எடுத்து, பெரிய அளவிலான கன்வேயரில் கொண்டு சென்று, பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
ஆனால், குப்பை கிடங்கு பகுதியில், எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், மண், கழிவுகள் மற்றும் துாசு பறக்கிறது. இதனால், சுற்றிலும் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்பதோடு, தாராபுரம் ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கின்றனர்.
சில சமயங்களில் சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. மேலும், கழிவுகள் முறையாக, மக்க வைத்து உரமாக மாற்றாமல், லாரிகளில் ஏற்றப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்போது, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல், கழிவுகளை லாரியில் மூடாமல் கொண்டு செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, குப்பை கிடங்கில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பணி மேற்கொள்ளவும், திட்ட அறிக்கை அடிப்படையில், முறையாக கழிவுகள்அகற்றவும் வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்னையில், உடுமலை நகராட்சியும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.