/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்ப்புற வாரிய வீடுகள் 60 பேருக்கு ஒதுக்கீடு
/
நகர்ப்புற வாரிய வீடுகள் 60 பேருக்கு ஒதுக்கீடு
ADDED : டிச 07, 2024 06:37 AM

திருப்பூர்; நெருப்பெரிச்சல் மற்றும் பெருந்தொழுவு பகுதியில் கட்டிய அடுக்குமாடி வீடுகள், நேற்று, குலுக்கல் முறையில், 60 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருப்பூர் கோட்டத்தில், அடுக்குமாடி வீடுகள் கட்டி, ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் நகரப்பகுதியில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கில் வசித்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில், 4,000க்கும் அதிகமான வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், மொத்த மதிப்பீட்டில், 10 சதவீதம் பங்களிப்பாக செலுத்த வேண்டும். அதன் பிறகு, மின் இணைப்பு பெற்று, பயனாளிகள் குடியேறி வசித்து வருகின்றனர்.
நெருப்பெரிச்சல் வருவாய் கிராமத்தில், பாரதி நகர் பகுதியில், 2ம் கட்டமாக வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பெருந்தொழுவு கிராமம் காமராஜ் நகர் பகுதியிலும் அடுக்குமாடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை வாயிலாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்கள், 10 சதவீத பங்களிப்பு தொகையை செலுத்தியுள்ளனர்.
நெருப்பெரிச்சல் பாரதி நகர் வீட்டுக்கு, பயனாளிகளின் பங்களிப்பாக, தலா, 88 ஆயிரத்து 611 ரூபாய் செலுத்தப்பட்டது. பெருந்தொழுவு வீட்டுக்கு, இரண்டு லட்சத்து, 20 ஆயிரத்து, 263 ரூபாய் பங்களிப்பாக செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்த நிலையில், நேற்று வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் சர்மிளாதேவி, தொழில்நுட்ப உதவியாளர்கள் சந்தோஷ், நவீன் ஆகியோர், பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்கீடு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நெருப்பெரிச்சல் பாரதி நகரில், 2ம் கட்டமாக, 45 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. பெருந்தொழுவு, காமராஜ் நகரில், 15 வீடுகள் கட்டப்பட்டன. பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பங்களிப்பு தொகை செலுத்தியவர்களுக்கு, குலுக்கல் முறையில் 60 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விரைவில், மின் இணைப்புக்கான தடையின்மை சான்று வழங்கப்படும். அதற்கு பிறகு, மின் இணைப்பு பெற்று, பயனாளிகள் குடியேறலாம்,' என்றனர்.