/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணி நிறைவு பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
/
சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணி நிறைவு பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணி நிறைவு பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணி நிறைவு பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2026 06:35 AM

உடுமலை: உடுமலை நகராட்சி சந்தையில், நீண்ட இழுபறிக்குப்பின் கடைகள் கட்டுமான பணி நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகராட்சி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என, தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
நகராட்சி சந்தை வளாகத்தில், 34 கமிஷன் கடைகள் உள்ளன. இங்கு, காய்கறி மொத்த வியாபாரம் நடந்து வருகிறது.
மேலும், சந்தை வளாகத்தில், 314 நிரந்தர கடைகளும், சந்தை கூடும் திங்கட்கிழமையில், நுாற்றுக்கணக்கான கடைகளும் அமைக்கப்படுகின்றன.
தினசரி சந்தையில், அமைக்கப்படும் கடைகளுக்கு, காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்யும் போது, காய்கறிகள் பாதிப்பதோடு, மழை காலங்களில் கடும் சேதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சிதிலமடைந்து காணப்பட்ட பழைய கட்டடங்களை அகற்றி விட்டு, நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக, 70 கடைகள் கட்ட, ஏழு ஆண்டுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் துவங்கி, ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த நிலையில், தற்போது கடைகள் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. எனவே, உடனடியாக கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சந்தை வளாகத்தில், வாகனம் மற்றும் மக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து. அமைந்துள்ள கடைகளை அகற்றி, புதிய கடைகளுக்கு மாற்றி, சந்தை வளாகத்தில் நெரிசலை குறைக்கவும், காய்கறிகள் கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றி செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தவும், இடம் ஒதுக்கீடு செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

