/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை - சேலம் அரசு பஸ் நிறுத்தம்; மீண்டும் இயக்க வலியுறுத்தல்
/
உடுமலை - சேலம் அரசு பஸ் நிறுத்தம்; மீண்டும் இயக்க வலியுறுத்தல்
உடுமலை - சேலம் அரசு பஸ் நிறுத்தம்; மீண்டும் இயக்க வலியுறுத்தல்
உடுமலை - சேலம் அரசு பஸ் நிறுத்தம்; மீண்டும் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 10:39 PM
உடுமலை; உடுமலை - சேலம் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கூட்டுறவு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலையிலிருந்து, திருப்பூர் வழியாக சேலத்திற்கு, குளிர் சாதன வசதியுடன் கூடிய அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ், திருப்பூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, நள்ளிரவு, 2:00 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது.
எந்தவித முன் அறிப்பும் இல்லாமல், இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில், சேலத்தில் இருந்து நேரடியாக உடுமலை வருவதற்கு வசதியாக இருந்ததோடு, திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நள்ளிரவு இயக்கப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயிலில் வருவோர், உடுமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை, பழநி, அமராவதி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும், பல்லடம், கேத்தனூர், ஜல்லிப்பட்டி, குடிமங்கலம் போன்ற ஊர் செல்வோருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
மேலும், வார விடுமுறை நாட்கள், கோடை விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி, முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
திருப்பூரிலிருந்து, இரவு 11:50க்கு கடைசி பஸ் இயக்கப்படுகிறது. அதற்கு பின், நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாலை, 4:00 மணிக்கு தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால், நேர விரையம், கூட்ட நெரிசல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, நள்ளிரவு இயக்கப்பட்ட, உடுமலை - சேலம் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.