/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோமாரி தடுப்பூசி; தயக்கம் கூடாது: விவசாயிகளுக்கு அறிவுரை
/
கோமாரி தடுப்பூசி; தயக்கம் கூடாது: விவசாயிகளுக்கு அறிவுரை
கோமாரி தடுப்பூசி; தயக்கம் கூடாது: விவசாயிகளுக்கு அறிவுரை
கோமாரி தடுப்பூசி; தயக்கம் கூடாது: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 29, 2025 07:07 PM
- நமது நிருபர் -
'கால்நடைகளுக்கு தயக்கமின்றி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தவேண்டும்,' என, வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நடைபெற்றது. முன்னதாக நடந்த கருத்தரங்கில், கோமாரி நோய் குறித்து, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுமித்ரா பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. கால்நடை வளர்ப்பாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சில காரணங்களால், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர்.
சினை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால், கருச்சிதைவோ வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது. கன்று ஈனும் நிலையில் உள்ள மாடுகளுக்கு, அதிர்ச்சிக்கு உள்ளாக்காமல், தடுப்பூசி செலுத்தினால், பாதிப்பு ஏற்படாது.
மூன்று மாதத்துக்கு கீழ் உள்ள கன்றுக்குட்டிகளுக்கு, தடுப்பூசி போடவேண்டாம்; மூன்று மாதத்தை கடந்த கன்றுக்குட்டிகளுக்கு, தடுப்பூசி செலுத்தலாம்.
கோமாரி தாக்கிய பசுவின் பாலை குடிக்கும் கன்றுக்கும், இதய தசைகள் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிடும். ஆகவே, கோமாரியால் பாதித்த பசுவின் பாலை, கட்டாயம் கன்றுக்கு கொடுக்கக்கூடாது.
இயற்கை மருத்துவம் கோமாரிக்கு, பேராசிரியர் புண்ணியமூர்த்தி பரிந்துரைத்த இயற்கை மருத்துவமும் உள்ளது. கோமாரி நோய் தாக்கிய மாட்டின் வாய் மற்றும் கால் குளம்புகளுக்கு இடையே புண் இருக்கும்.
தலா பத்து கிராம் வீதம் வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை, 30 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பூண்டு, மஞ்சள் துாள், நாட்டுச்சர்க்கரை அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
முழு தேங்காயை துருவல் சேர்த்து, மேற்கண்ட பொருட்களோடு கலந்து, உருண்டையாக்கவேண்டும்.
சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, மாட்டின் நாக்குக்கு அடியிலும், பக்கவாட்டிலும் வைத்து மென்மையாக தடவ வேண்டும். உமிழ்நீரோடு சேர்ந்து இந்த மருந்து உள்ளே செல்லும்போது, நோய் தாக்கம் குறையும்.
கால் குளம்பில் உள்ள புண்களுக்கு, நல்லெண்ணெய், பூண்டு, வ ே ப்பிலை, துளசி, குப்பைமேனி, மருதாணி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் நல்லண்ணெயோடு சேர்ந்து காய்ச்சவேண்டும்.
இதனை, கால் குளம்பில்விட்டால், புண்களிலிருந்து கண்ணுக்கு தெரியாத புழுக்கள் வெளியேறிவிடும்.
இவ்வாறு, அவர் பேசினார்.