/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஏ.ஓ., கவுன்சிலிங் 'சர்ச்சை'; சமாதானம் செய்த ஆர்.டி.ஓ.,
/
வி.ஏ.ஓ., கவுன்சிலிங் 'சர்ச்சை'; சமாதானம் செய்த ஆர்.டி.ஓ.,
வி.ஏ.ஓ., கவுன்சிலிங் 'சர்ச்சை'; சமாதானம் செய்த ஆர்.டி.ஓ.,
வி.ஏ.ஓ., கவுன்சிலிங் 'சர்ச்சை'; சமாதானம் செய்த ஆர்.டி.ஓ.,
ADDED : ஜன 29, 2025 03:40 AM
திருப்பூர்; குறிப்பிட்ட சில வருவாய் கிராமங்களை பெறுவதில் இரண்டு சங்கங்களிடையே கடும்போட்டி நிலவியதால், வி.ஏ.ஓ., கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
நகர்ப்புறங்களில் உள்ள வருவாய் கிராமங்கள், 'ஏ' கிராமங்களாகவும், கிராமப்புறங்களில் உள்ளவை, 'பி' கிராமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 'ஏ' கிராமங்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறையும், 'பி' கிராமங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வி.ஏ.ஓ.,க்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறுவது வழக்கம். திருப்பூர் வருவாய் கோட்டத்தில், 142 வருவாய் கிராமங்கள் உள்ளன.
கடந்த 2023 நவ., மாதம், கவுன்சிலிங் நடத்தி, டிசம்பரில் வி.ஏ.ஓ.,க்கள் இடம்மாறுதல் செய்த கிராமங்களில் பொறுப்பேற்றனர். 2024 நவ., மாதம் நடக்கவேண்டிய இடம் மாறுதல் கவுன்சிலிங் இரண்டு மாதங்களாகியும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், திருப்பூர் வருவாய் கோட்டத்தில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களில் பணியிட மாறுதல் நிலையில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர், காலை, 10:00 மணிக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்.
ஆனால், இரு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களிடையே, குறிப்பிட்ட சில கிராமங்களில் பணியிடம் பெறுவது தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டது. இதன்காரணமாக, காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டது.
ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், இருதரப்பு சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இரு தரப்பினரும் சமாதானம் அடைந்ததால், கவுன்சிலிங் இன்று மாலை, 4:00 மணிக்கு நடைபெறுகிறது.

