/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்த வாகனங்கள்
/
தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்த வாகனங்கள்
ADDED : டிச 07, 2024 06:38 AM

பல்லடம்; பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளை மூச்சுத் திணற வைத்தது.
தமிழகத்தில், தொழில் ரீதியாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. வளர்ந்து வரும் கோவைக்கு, வாகன போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் அவசியமானதாக உள்ளது. கரூர்- - கோவை தேசிய நெடுஞ்சாலை, வாகன மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கரூர் -- கோவை பசுமைவழிச் சாலை அமைக்க, 2018ல் திட்டமிடப்பட்டது.
இன்று வரை இத்திட்டம் கானல் நீராகவே உள்ளது. பல்லடம் நகரப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை வாகனங்கள் கடந்து செல்வது சவாலாக உள்ளது. காரணம்பேட்டை- - பல்லடம் - - வெள்ளகோவில் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மாறாத நெரிசல்
இருப்பினும், இந்த பணியால், வாகன விபத்து குறைந்துள்ளதே தவிர, போக்குவரத்து நெரிசலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும், பல்லடம், பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை ஊர்ந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
முகூர்த்த நாள் என்பதால், கடந்த இரண்டு தினங்களாக, பல்லடம் பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை இடைவெளியின்றி வாகனங்கள் சென்று, தேசிய நெடுஞ்சாலையை மூச்சு திணற வைத்தது. நான்கு திசைகளில் இருந்தும் வாகனங்கள் அணிவகுத்துவர, போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். முகூர்த்த நாள் என்றாலே, போலீசாருக்கு மூளை கொதிக்கும் விடும் அளவுக்கு, பல்லடத்தின் போக்குவரத்து நெரிசல் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
----