/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையில் கண்காணிப்பு தேவை; நடைபயணம் மேற்கொள்ள முடிவு
/
திருமூர்த்தி அணையில் கண்காணிப்பு தேவை; நடைபயணம் மேற்கொள்ள முடிவு
திருமூர்த்தி அணையில் கண்காணிப்பு தேவை; நடைபயணம் மேற்கொள்ள முடிவு
திருமூர்த்தி அணையில் கண்காணிப்பு தேவை; நடைபயணம் மேற்கொள்ள முடிவு
ADDED : அக் 13, 2024 10:02 PM
உடுமலை : 'திருமூர்த்தி அணையில், அரசு விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் அத்துமீறலில் ஈடுபடுவதை தடுக்க, தீவிர கண்காணிப்பு தேவை என, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழுவின் சார்பில், மாவட்ட தலைவர் பரமசிவம் அறிக்கை:
அணைகளை பாதுகாக்க, தமிழக அரசால் விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. உடுமலையில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையில், தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு மட்டும், அரசாணை அடிப்படையில் அமைச்சர், கலெக்டர், அரசு அலுவலர்கள், விவசாயிகள், மக்கள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பிற நேரங்களில் யாருக்கும் அனுமதி கிடையாது.
தற்போது, அணை அருகில், 'கேம்ப் ஸ்பிளிண்டர் நேசனல் அட்வென்சரஸ்,' என்ற நிறுவனம் தங்கும் விடுதி கட்டி, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அணையின் முக்கிய பகுதியில், அனைத்து நேரங்களிலும், படகுகளில் ஆட்களை அழைத்துச்சென்று, பாதுகாப்பு இல்லாமல் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, விதிமுறைப்படி அனுமதி பெற்று செயல்படவில்லை என்றால் விடுதிக்கு 'சீல்' வைக்க வேண்டும். அணை பாதுகாப்பு விதிகள்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பி.ஏ.பி., பாசன சங்க தலைவர்கள், பகிர்மான குழு தலைவர்கள், திருமூர்த்தி நீர்தேக்க திட்ட குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஆயக்கட்டு விவசாயிகளோடு ஆலோசனை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, அறிவித்தது.
இந்நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அணை பகுதிக்குள் தனியார் நுழையாதவறு அகழி தோண்டியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் போதாது. நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, இந்த விவகாரத்தில் போலீசார் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நீர்வளத்துறை சார்பில் புகார் அளித்தும், தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்கு, திருப்பூர் எஸ்.பி., விளக்கம் அளிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், விவசாயிகள் சார்பில், எஸ்.பி., அலுவலகம் நோக்கி, திருமூர்த்தி அணையை பாதுகாக்கவும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காதற்கு விளக்கம் கேட்டும் நடைபயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.