/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்வப்பெருக்குடன் விஜய் ரசிகர்கள்!
/
ஆர்வப்பெருக்குடன் விஜய் ரசிகர்கள்!
ADDED : பிப் 04, 2024 01:58 AM
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சி துவங்கும் அறிவிப்பு திருப்பூர் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் 30 ஆண்டு முன்பே விஜய்க்கு ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. திருப்பூர் நகர அளவிலான இந்த அமைப்பு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாக இருந்தது. அதன் பின் நிர்வாக வசதிக்காக திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
4 மாவட்டங்களாகதிருப்பூர் பிரிப்பு
கடந்த 2022ல் திருப்பூர் மத்திய மாவட்டம், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் நகர நிர்வாகிகளாக இருந்தவர்கள் மாவட்ட நிர்வாகிகளாகப் பணியாற்றினர்.
தற்போது திருப்பூரில் நான்கு மாவட்ட அமைப்புகள்; 11 ஒன்றியம் மற்றும் ஐந்து நகர அமைப்புகளும் 1,500க்கும் மேற்பட்ட கிளைகளும் செயல்படுகிறது. இந்த அமைப்புகள் 1993ம் ஆண்டு முதல் துவங்கப்பட்ட நிலையில், 1998ம் ஆண்டு முதல் சேவைப் பணியில் தங்களை ஈடுபடுத்தி வந்துள்ளன.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் உட்பட 40 இடங்களில் பயணிகளுக்கு நிழற்குடை அமைப்பை ஏற்படுத்தி தங்கள் மக்கள் பணியைத் துவங்கினர்.மேலும் கடந்த 2000ம் ஆண்டு, திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் விஜய் பங்கேற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினர்.
தொடர்ந்து விஜய் நடித்த படங்கள் வெளியாகும் நாட்கள், அவரது பிறந்த நாள் போன்ற நாட்களில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்குதல், நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்குதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டனர்.
அவ்வகையில் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கமாக மாறியதோடு கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பங்கேற்றனர். உள்ளாட்சித்தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டுக்களையும் பெற்றிருந்தனர். ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:
மக்கள் இயக்கமாக இருந்து தற்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. இது குறித்து பல தரப்பினரும் தொடர்பு கொண்டு வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ள நிலையிலும், தலைமை இதை முறையாக அறிவித்த பின் நிர்வாகிகள் நியமனம் நடைபெறும் எனத் தெரிகிறது.
பெருமளவு மக்கள் இயக்க பொறுப்பாளர்களே இதிலும் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கிறோம். அரசியல் பணிகள் குறித்து தலைமையின் உத்தரவுகள் கிடைக்கப் பெற்ற பின் அதனடிப்படையில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும். அரசியலில் நடுநிலை வகிக்கும் பெரும்பாலானோர் தங்கள் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அடுத்த சட்டசபை தேர்தல் தான் நமது இலக்கு என விஜய் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் இறங்கும் முன்பே அவரது தெளிவான முடிவு என்ன என்பதை தெரிவித்துள்ளார். இயக்கத்தின் பயணமும் அந்த இலக்கை நோக்கித் தான் பயணிக்கும். மக்கள் ஆதரவுடன் வெற்றிக்கனியை எளிதாகப் பறிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.