ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம்: முதல்வரிடம் திருமா, சண்முகம் வலியுறுத்தல்
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம்: முதல்வரிடம் திருமா, சண்முகம் வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2025 11:00 AM

சென்னை: ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திருமாவளவன், சண்முகம், முத்தரசன் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் கூட்டணி கட்சித்தலைவர் திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் சந்தித்தனர். ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர் நிருபர்களை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது: ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் தேவை. ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் வேண்டும் என்று சட்ட ஆணையமும் தெரிவித்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் முன்மொழிந்துள்ளது.
ஆணவக் கொலைகள் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் நடக்கின்றன. ஆணவக் கொலையை தடுக்க வலியுறுத்தி, ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையிலும், ஆகஸ்ட் 11ம் தேதி தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி போராட்டம் நடத்தும். பாஜவுடன் அடிமையாக இருப்பது போல் அதிமுக பிற கட்சிகளையும் எண்ணிக் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
''ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது'' என மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.
கொலைகள் அதிகரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: சாதிய ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்திற்கு அழகல்ல. ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் ஏற்றுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.