/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்பாடின்றி முடங்கிய கிராம குழுக்கள்! கண்டுகொள்ளாத வனத்துறை
/
செயல்பாடின்றி முடங்கிய கிராம குழுக்கள்! கண்டுகொள்ளாத வனத்துறை
செயல்பாடின்றி முடங்கிய கிராம குழுக்கள்! கண்டுகொள்ளாத வனத்துறை
செயல்பாடின்றி முடங்கிய கிராம குழுக்கள்! கண்டுகொள்ளாத வனத்துறை
ADDED : ஆக 26, 2025 10:22 PM
உடுமலை; வன எல்லை கிராமங்களில், மனித - வனவிலங்கு மோதலை தடுக்கும் வகையில், வனத்துறையால் அமைக்கப்பட்ட கிராம குழுக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் 2008ல், சேர்க்கப்பட்டன. அப்போது, வனத்துறை சார்பில் கிராமங்களில், விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர்.
அதில், 'புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று எனப்படும் வன எல்லை கிராமங்களின் மேம்பாட்டிற்கும், திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும், வனத்துறை, மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் அடங்கிய கிராமக்குழு அமைக்கப்படும்.
அக்குழுவிற்கு, புலிகள் காப்பக திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, அந்நிதியில், குழு சார்பில் திட்டமிடும் பணிகள் மேற்கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டது. உடுமலை, அமராவதி வனச்சரக எல்லை கிராமங்களில், கிராம குழு துவங்கப்பட்டன.
இக்குழுக்கள் முறையாக செயல்படாமல் முடங்கியுள்ளது. அப்பகுதியிலுள்ள விளைநிலங்களில், பல்வேறு வனவிலங்குகளால் தொடர் சேதம் ஏற்பட்டு வருகிறது. மனித - வனவிலங்கு மோதல் பிரச்னை தொடர்கதையாக உள்ளது.
கிராம மக்கள் கூறியதாவது: வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட, கிராம குழு செயல்பாடு இல்லாமல் முடங்கிய நிலையில் உள்ளது. மனித-வன விலங்குகள் மோதலை தவிர்ப்பதற்கான பல்வேறு பணிகளை கிராம குழுவிற்கு ஒதுக்கப்படும் நிதியில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம்.
வனத்துறைக்கும், வன எல்லை கிராம மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய குழு முடங்கி வருவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.