/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமைப்போர்வை உருவாக்கும் கிராம நாற்றுப்பண்ணை
/
பசுமைப்போர்வை உருவாக்கும் கிராம நாற்றுப்பண்ணை
ADDED : ஏப் 18, 2025 11:42 PM

திருப்பூர்: நுாறு நாள் வேலை திட்டம் மூலம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் முயற்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு காரணமாக, நடுவச்சேரி கிராமத்தில், அரியவகை மரக்கன்றுகளுடனான நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பசுமையை மேம்படுத்தவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அரிய வகை மரக்கன்றுகள்
அழிந்து வரும் அரிய வகை மரங்களான கொடாம்புளி, சிலுப்பலான், பூந்திக்கொட்டை, செஞ்சந்தனம், மகோகனி, குமிழ், வேம்பு, இலுப்பை, குதிரை குளம்பு மற்றும் பல மூலிகை செடிகள் உட்பட பல்வேறு வகை மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
இங்கு 70 முதல் 90 சதவீதம் வரை முளைப்பு திறன் கொண்ட விதைகள் மட்டுமே நாற்று உற்பத்திக்கு தேர்வு செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக வனத் துறைக்கு சொந்தமான விதை சேகரிப்பு மையம், திருச்சி அரசு வன விதைகள் சேகரிப்பு மையம் மற்றும் கேரளா அரசு வன விதைகள் சேகரிப்பு மையம் ஆகியவைகளில் இருந்து தரமான விதைகள் வாங்கி வந்து இங்கு நாற்றுகளாக உருவாக்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, அதிக விளைச்சலை உறுதி செய்கிறது.விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் மற்றும் நாற்றுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
மரம் வளர்ப்பை ஊக்குவிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பசுமைப்பரப்பு அதிகரிப்பு
நாற்றுப்பண்ணை மூலம் அவிநாசி ஒன்றியத்தின் பசுமை போர்வை அதிகரிக்கப்படுகிறது; மரங்கள் மூலம் காற்று மாசுபாடு குறைகிறது; மழை வளம் பெருகுகிறது. விவசாயிகள் குறைந்த விலையில் நாற்றுகளைப் பெற்று நட்டு பராமரித்து அதன் மூலம் வருமானம் பெறுகின்றனர். காலத்தால் அழிந்து வரும் பல அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த நாற்றுப்பண்ணை மூலம், அவிநாசி ஒன்றியம் பசுமை நிறைந்த பகுதியாக மாறுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. நுாறு நாள் வேலை திட்டத்தில் ஒரு புதுமையான முயற்சியாக இந்த நாற்றுப் பண்ணை செயல்படுகிறது.

