/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம குளங்களுக்கு தண்ணீர் தேவை: அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
/
கிராம குளங்களுக்கு தண்ணீர் தேவை: அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
கிராம குளங்களுக்கு தண்ணீர் தேவை: அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
கிராம குளங்களுக்கு தண்ணீர் தேவை: அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
ADDED : ஜூலை 03, 2025 08:20 PM
உடுமலை; நான்காம் மண்டல பாசனம் துவங்கும் முன் திருமூர்த்தி அணையிலிருந்து, ஆயக்கட்டு பகுதியிலுள்ள கிராம குளங்களுக்கு, தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசன விளைநிலங்களுக்கும், சுழற்சி முறையில் பாசன நீர் வழங்கப்படுகிறது. தற்போது மூன்றாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளது.
நான்காம் மண்டலத்தின் கீழ் பாசன வசதி பெறும் பகுதிகளில், எவ்வித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. குறிப்பாக, கிளை, பகிர்மான கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளன.
தொடர் மழை காரணமாக, சாகுபடிக்காக விளைநிலங்களிலும் எவ்வித பணிகளையும் துவக்க முடியாமல், விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், திருமூர்த்தி அணையின் நீர்இருப்பு திருப்திகரமாக இருப்பதால், இந்த இடைவெளியில் ஆயக்கட்டு பகுதியிலுள்ள கிராம குளங்களுக்கு தண்ணீர் வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் மட்டும், பி.ஏ.பி., ஆயக்கட்டு பகுதியில், 110க்கும் அதிகமான குளங்கள் உள்ளன. பருவமழை காலங்களில் மட்டுமே இந்த குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்.
இக்குளங்களில், திருமூர்த்தி அணை வாயிலாக பெறப்படும் தண்ணீரை நிரப்பினால், பல மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கும்; சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்களுக்கு வரத்து கிடைத்து, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது.
ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், குளங்களுக்கு தண்ணீர் பெற, பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் பல முறை கோரிக்கை மனு கொடுத்தாலும் பலன் இருப்பதில்லை. மாவட்ட நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை.
முன்பு, மண்டல பாசன காலத்தின் போது, ஆயக்கட்டு விவசாயிகள், தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, பாசன நீரை வீணடிக்காமல் குளங்களில் எளிதாக நிரப்பி வந்தனர். தற்போது பல்வேறு நடைமுறைகளை தெரிவித்து குளங்களில் நீர் நிரப்ப அலைக்கழிக்கப்படுவதால், விவசாயிகள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.