/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டிய கிராம ஓடைகள் மழை நீர் சேகரிக்க சிக்கல்
/
புதர் மண்டிய கிராம ஓடைகள் மழை நீர் சேகரிக்க சிக்கல்
புதர் மண்டிய கிராம ஓடைகள் மழை நீர் சேகரிக்க சிக்கல்
புதர் மண்டிய கிராம ஓடைகள் மழை நீர் சேகரிக்க சிக்கல்
ADDED : மே 29, 2025 12:13 AM
உடுமலை, ; பருவமழை சீசனுக்கு முன், கிராம ஓடைகளை பராமரிக்க, எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காததால், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேகரிக்க முடிவதில்லை.
பருவமழை காலங்களில் பெய்து வரும் மழைநீரை சேமிக்கும் வகையில், ஓடைகள், குளங்கள், குட்டைகள் போன்றவை முன்னோர்களால் உருவாக்கப்பட்டன. இதன் வாயிலாக, விவசாயத்திற்கு தேவையான நீரும், குடிநீர் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 75க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன; குடிமங்கலம் ஒன்றியத்தில், உப்பாறு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஓடைகள் பயன்பாட்டில் உள்ளன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில், மட்டும், இந்த ஓடைகளில் நீரோட்டம் இருக்கும். இந்த ஓடைகள் வழியாக செல்லும் தண்ணீர், கிராம குளங்களில், நிரம்பி, சுற்றுப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மழை நீர் ஓடைகள், முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், பெரும்பாலான ஓடைகளில், மழை நீர் செல்ல வழியில்லாத அளவுக்கு புதர் மண்டியிருந்தது; குளங்களுக்கும் நீர்வரத்து கிடைப்பதில் பாதிப்பு உருவானது.
தற்போதும், புதர் மண்டி பரிதாப நிலையில், மழை நீர் ஓடைகள் காணப்படுகின்றன. இந்தாண்டு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கி வலுவடைந்துள்ளது.
ஆனால், புதர் மண்டி காணப்படும் ஓடைகளிலும், அதன் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளுக்கும் நீர்வரத்து கிடைக்கவில்லை.
மழை இடைவெளி காலத்தில், அனைத்து ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தி, ஓடையிலுள்ள, புதர்களை அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை வலுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
ஓடைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தால், பருவமழை சீசனில் கிடைக்கும் மழை நீரை குளங்களிலும், தடுப்பணைகளிலும் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியும். ஆனால், ஒன்றிய நிர்வாகத்தினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.