/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்திகரிக்கணும்; கிராம மக்கள் வலியுறுத்தல்
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்திகரிக்கணும்; கிராம மக்கள் வலியுறுத்தல்
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்திகரிக்கணும்; கிராம மக்கள் வலியுறுத்தல்
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்திகரிக்கணும்; கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2025 09:40 PM
உடுமலை; கிராம ஊராட்சிகளில் உள்ள, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்திகரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர், குளோரினேஷன் செய்யப்படுவது வழக்கம். ஆனால் குடிநீர் சேகரிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், துாய்மை இல்லாமல் இருப்பதால், குளோரினேஷன் செய்வதிலும் பயனில்லாமல் உள்ளது.
பெரும்பான்மையான ஊராட்சிகளில், தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் குளோரினேஷன் செய்தாலும், குடிநீர் துாய்மை இல்லாமல்தான் உள்ளது.
மேல்நிலை தொட்டிகளில் கழிவுகளாகவும், அதிகமாக பாசி படர்ந்திருப்பதும் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் கலங்கலான குடிநீர்தான் வினியோகிக்கப்படுகிறது.
வீடுகளில் வடிகட்டி வைத்து பிடித்தாலும், அவற்றை மீண்டும் காய்ச்சிதான் குடிக்க வேண்டியுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு, நாள்தோறும் குடிநீர் காய்ச்சி குடிப்பதற்கு எரிபொருள் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் தற்போது 'கேன்' குடிநீர் தான் பயன்படுத்துகின்றனர். அதற்கான வசதி இல்லாத வீடுகளில் பலமுறை குடிநீரை வடிகட்டி சுத்திகரிக்கின்றனர்.
அடிப்படை சுத்தமான குடிநீர் தேவைக்கு, பொதுமக்கள் இத்தகைய பிரச்னைகளை கடந்து வர வேண்டியுள்ளது. குறிப்பாக பருவநிலை மாற்ற நேரங்களில், குழந்தைகளுக்கு சுத்திகரிப்பு இல்லாத குடிநீர் வாயிலாக, அதிகமான நோய்கள் பரவுகின்றன.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது தான், இப்பிரச்னையின் அடிப்படையாக உள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளான பெரியகோட்டை, கணக்கம்பாளையத்தில் குடிநீர் தேவைக்கு, உடுமலை நகரத்துக்கு வந்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். கிராமங்களில் அதற்கும் வசதி இல்லை.
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.