/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனம்: குப்பை மேடாகி வரும் கிராமங்கள்
/
உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனம்: குப்பை மேடாகி வரும் கிராமங்கள்
உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனம்: குப்பை மேடாகி வரும் கிராமங்கள்
உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனம்: குப்பை மேடாகி வரும் கிராமங்கள்
ADDED : நவ 16, 2025 12:40 AM

பல்லடம்: குடிநீர், தெருவிளக்கு, ரோடு வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டை ஒதுக்கும் உள்ளாட்சி அமைப்புகள், குப்பை மேலாண்மைக்காக போதிய நிதி ஒதுக்குவதில்லை.
விரல் விட்டு என்னும் அளவுக்கு துாய்மை பணியாளரையும், வாகனங்கள் சிலவற்றையும் வைத்துக்கொண்டு, பெயரளவுக்கு மட்டுமே குப்பை மேலாண்மை நடக்கிறது. அதிலும், தரம் பிரிப்பதாக கூறி, கிராமங்களில் தோண்டப்பட்ட குழிகளில், புல் பூண்டுகள் முளைத்தும், மது பாட்டில்களாலும் ஆக்கிரமித்துள்ளன. தரம் பிரிக்கும் மையங்களோ, தகாத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறிவிட்டன.
இரவோடு இரவாக, எல்லை தாண்டிச் சென்று குப்பைகள், கழிவுகளை கொட்டுவது; நீர்நிலைகள், பாறைக்குழிகள், கிணறுகள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவற்றை குப்பைகளால் மூடி பாழாக்குவது உள்ளிட்ட செயல்களைத்தான் உள்ளாட்சி அமைப்புகள் பின்பற்றி வருகின்றன.
இந்த அலட்சியப் போக்கு காரணமாகவே, மழை நீரை சேகரித்து வைக்க வேண்டிய நீர்நிலைகள் அனைத்தும் இன்று வானம் பார்த்த பூமியாக உள்ளன. தண்ணீர் இன்றி, ஆழ்துளை கிணறுகள் அமைத்து, பூமி எங்கும் துளைகள் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு, உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், குப்பை மேலாண்மை பூஜ்ஜியமாக உள்ளது. இன்று திருப்பூர் மாநகராட்சியில் நடந்து வரும் குப்பை பிரச்னை, பின்நாளில், ஒவ்வொரு கிராமங்களிலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
வழக்கம்போல், 'துணிப்பைகளைப் பயன்படுத்துங்கள்' என, மக்களிடம் போதிக்காமல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். விதிமுறை மீறி நெகிழிப்பைகள் வினியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகை மற்றும் சேகரமாகும் குப்பைகளின் அடிப்படையில், ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, நவீன குப்பை கிடங்குகளை அமைக்க வேண்டும்.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குப்பைகளை தரம் பிரிப்பதுடன், மக்கும் குப்பைகளை உரமாகவும்; மக்காத குப்பைகளை மாற்றுப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகமும், பொதுமக்களின் இதர அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்குவது போல் கூடுதல் நிதி ஒதுக்கி, குப்பை மேலாண்மையை முறையாக கையாள வேண்டும்.
குப்பை மேலாண்மையை முறையாக கையாளாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் உள்ளாட்சி நிர்வாகங்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தயங்கக்கூடாது. சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து வரும் இந்த குப்பை மேலாண்மை பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.

