/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காத கழிவுகளால் பாழாகும் கிராமங்கள்; மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு
/
மக்காத கழிவுகளால் பாழாகும் கிராமங்கள்; மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு
மக்காத கழிவுகளால் பாழாகும் கிராமங்கள்; மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு
மக்காத கழிவுகளால் பாழாகும் கிராமங்கள்; மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 02, 2025 08:41 PM
உடுமலை; உடுமலை ஒன்றியத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் செயல்படுத்தப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை பணிகளில், குப்பைக்கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பது முதன்மையாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சியிலும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில், துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஊராட்சிகளில், உரம் தயாரிப்பது மற்றும் குப்பைக்கழிவுகளை தரம் பிரிப்பதற்கான குடில் ஒன்றும் அமைக்கப்பட்டது.
துாய்மைக்காவலர்கள், குப்பைக்கழிவுகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத வகைகளை பிரிக்க வேண்டும். இதில் மக்கும் கழிவுகளை உரமாக்குவதற்கு உரக்குழிகள் அமைத்து, அதில், சேகரிப்பதும் திட்டத்தின் செயல்பாடாக உள்ளது.
ஆனால், பெரும்பான்மையான ஊராட்சிகளில், கழிவுகளை தரம்பிரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை. பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல், கழிவுகளை ஒன்றாகவே கொட்டுவதால், பணியாளர்களும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், சில பகுதிகளில் கழிவுகளை, நீர் ஆதாரங்களுக்கு அருகில் தீ வைத்து எரிப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
இப்பிரச்னை குறித்து, மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கிராமங்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.
கிராமங்களில் குப்பைக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்து, சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக, உரக்குடில்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கழிவுகளை தரம் பிரிப்பதற்கு இயந்திரம் பொருத்துவதற்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
மேலும், மக்காத கழிவுகள், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள்தான் கிராமங்களின் சுகாதார பிரச்னைகளுக்கு அடித்தளமாக உள்ளது. கழிவுநீர் ஓடைகள், நீர்நிலைகளில் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளன.
மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்து, ரோடு போடும் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை துவக்கப்பட்டு, பின் கிடப்பில் போடப்பட்டது.
பசுமை நிறைந்த கிராமங்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாய் போவதை தடுக்க, குப்பைக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு, மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.