/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறி பறக்கும் வாகனங்கள் நடவடிக்கை தேவை
/
விதிமீறி பறக்கும் வாகனங்கள் நடவடிக்கை தேவை
ADDED : நவ 18, 2024 10:26 PM
உடுமலை; உடுமலை பகுதியில், விதிமுறைகளை மீறி, அதிக ஒளி வீசும் விளக்குகளை இரு சக்கர வாகனங்களில், பொருத்திக்கொண்டு, அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோட்டார் வாகன சட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இரு, நான்கு சக்கரம், பஸ் மற்றும் சரக்கு வாகனங்களில், முகப்பு விளக்கு பொருத்துவது மற்றும் அவற்றை பராமரிக்கும் விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.
விதிகளை மீறி, அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்தி, வாகனம் ஓட்டுபவர்களால், எதிரே வரும் வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
தற்போது பெரும்பாலான இளைஞர்கள், தங்களது இருசக்கர வாகனங்களில், முகப்பு விளக்குக்கு கீழே தனியாக 'ஸ்டாண்ட்' அமைத்து, கூடுதலாக அதிக ஒளி வீசும் இரண்டு விளக்குகளை பொருத்துகின்றனர்.
இவ்வாகனங்கள் இரவு நேரத்தில், ரோட்டில் செல்லும் போது, நான்கு சக்கர வாகனங்கள் வருவது போல், தெரிகிறது. இதனால், குழப்பம் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும், இவ்விளக்குகள், அதிக ஒளியை வெளியிடுவதால், எதிரே வருபவர்கள் நிலைதடுமாறுகின்றனர்.
தங்களது பொழுதுபோக்கிற்காக இத்தகைய விளக்குகளை பொருத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை மற்றும் உடுமலை சுற்றுப்பகுதி கிராம இணைப்பு ரோடுகளில் அதிவேகமாக செல்லும் நபர்களால், அனைத்து வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.