/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி; தொழிற்கடன் திட்டத்தில் பயனாளிகள் ஆர்வம்
/
வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி; தொழிற்கடன் திட்டத்தில் பயனாளிகள் ஆர்வம்
வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி; தொழிற்கடன் திட்டத்தில் பயனாளிகள் ஆர்வம்
வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி; தொழிற்கடன் திட்டத்தில் பயனாளிகள் ஆர்வம்
ADDED : ஜன 29, 2025 03:44 AM

திருப்பூர்; மத்திய, மாநில அரசு களின் தொழிற்கடன் திட் டத்தில் தொழில் துவங்க உள்ள தொழில் முனைவோருக்கான, சிறப்பு பயிற்சி முகாம் திருப்பூரில் துவங்கியுள்ளது.
மத்திய அரசின் ஓர் அங்கமாக இயங்கும், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் திறன் கவுன்சில் சார்பில், ஆயத்த ஆடை உற்பத்தி தொடர்பாக, திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் தலைவர் சக்திவேல் தலைமையில் இயங்கும் கவுன்சில், மத்திய அரசு சான்றிதழ் வழங்குவதால், 100 சதவீதம் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின், மானியத்துடன் கூடிய தொழிற்கடன் திட்டத்தில், கடன் வழங்கும் முன், சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருமாதகால பயிற்சி முடித்த சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே, வங்கிக்கடன் மற்றும் மானியம் விடுவிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான, பின்னலாடை தொழில் சார்ந்த தொழில்கள் துவங்க, தொழில்முனைவோர் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். தொழிற்கடன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 103 நபர்களுக்கான பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது.
திருப்பூரில் இயங்கும், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் திறன் கவுன்சில் அலுவலகத்தில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மையத்தின் இணை இயக்குனர் சங்கரராகவன், கவுன்சில் மூலமாக வழங்கப்படும் பயிற்சி விவரங்கள் குறித்து பேசினார்.
மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர்கள், மணிவண்ணன் (திருப்பூர்), புவனேஷ்வரன் (கோவை), தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தின் உதவி இயக்குனர் ஜெகதீஷ்பாபு ஆகியோர், அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மற்றும் தொழில்முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசினர்.
இதுகுறித்து ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் திறன் கவுன்சில் நிர்வாகிகள் கூறுகையில், 'பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை சார்ந்த தொழில் துவங்க உள்ள முனைவோருக்கு, பயிற்சி துவங்கியுள்ளது.
பயிற்சி நிறைவாக மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பின், தொழிற்கடன் மற்றும் மானியம் விடுவிக்கப்படும். ஆயத்த ஆடை தொழிலின் அனைத்து படிநிலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்,' என்றனர்.

