/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்
ADDED : நவ 05, 2025 12:23 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பட்டியலில் இடம்பெற்றுள்ள 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்களுக்கு, தீவிர திருத்த படிவம் வழங்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளன; 2,536 பி.எல்.ஓ.,க்கள், வீடு தேடிச் சென்று படிவம் வழங்கும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரட்டை பதிவு வாக்காளர், போலிகள், இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்து, நேர்த்தியான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்துள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் நேற்றுமுதல், தீவிர திருத்த களப்பணிகள் துவங்கியுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், ஒட்டுமொத்த வருவாய்த்துறை, அரசு ஊழியளர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர், மாவட்ட தேர்தல் அலுவலராக செயல்படுகிறார். ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் மொத்தம் எட்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள், 26 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தொகுதிக்கு ஒருவர் வீதம் எட்டு தேர்தல் துணை தாசில்தார்கள், ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம், மொத்தம் 2,536 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து பி.எல்.ஓ.க்களுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில், பி.எல்.ஓ. மேற்பார்வையாளர்கள் 265 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பி.எல்.ஓ.க்கள் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கமான தங்கள் அலுவல் பணிகளை முடித்துவிட்டு, மதியம் 2:00 மணி முதல், வீடு வீடாக சென்று தீவிர திருத்தத்துக்கான படிவம் வழங்கும் பணிகளை துவக்கினர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு பி.எல். ஓ.வும் அதிகபட்சம் 500 வீடுகளுக்குச் செல்ல வேண்டும். கதவு பூட்டப்பட்டிருந்தால், குறிப்பிட்ட வாக்காளர் குறித்து அருகாமையில் விசாரிக்கவும். போனில் தொடர்பு கொள்ளலாம். அருகில் உறவினர்கள் இருப்பின், அவர்கள் வாயிலாக வாக்காளரிடம் படிவத்தை சேர்க்கலாம். பூட்டப்பட்ட வீடுகளுக்கு, மூன்று முறை பி.எல்.ஓ. செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்து, கையெழுத்திட வேண்டும். 2002ம் ஆண்டு தீவிர திருத்த பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்கள் மற்றும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையரின் பெயர் இடம்பெற்றவர்கள், அவ்விவரங்களை, கட்டாயம் படிவத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.
பி.எல்.ஓ. மீண்டும் வீடு தேடி வரும்போது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்காதவர்களின் பெயர், டிச. 9ல் வெளியாகும் வரைவு பட்டியலில் இடம்பெறாது. அனைத்து களப்பணிகளும் டிச. 4ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

