/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படிவம் சமர்ப்பித்த வாக்காளர்கள் 80 சதவீதம்!:எஸ்.ஐ.ஆர். கணக்கீடு நிறைவு
/
படிவம் சமர்ப்பித்த வாக்காளர்கள் 80 சதவீதம்!:எஸ்.ஐ.ஆர். கணக்கீடு நிறைவு
படிவம் சமர்ப்பித்த வாக்காளர்கள் 80 சதவீதம்!:எஸ்.ஐ.ஆர். கணக்கீடு நிறைவு
படிவம் சமர்ப்பித்த வாக்காளர்கள் 80 சதவீதம்!:எஸ்.ஐ.ஆர். கணக்கீடு நிறைவு
ADDED : டிச 15, 2025 05:16 AM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தின், எட்டு சட்டசபை தொகுதிகளின் மொத்த வாக்காளரில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், படிவம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.
தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீடு பணிகள், தமிழகத்தில் கடந்த நவ. 4ம் தேதி துவங்கப்பட்டது. வாக்காளர்களிடமிருந்து கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவி நாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன; அக். 27ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) வாயிலாக, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இரவு பகலாக பணி பி.எல்.ஓ.,க்களுக்கு உறுதுணையாக, வருவாய்த்துறை, கூட்டுறவு, வேளாண் உள்பட பல்வேறு துறையினரும், வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட, பூர்த்தி செய்த படிவங்களை ஆன் லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டனர்.
கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை, தேர்தல் கமிஷன் இரண்டு முறை நீட்டித்தது. இம்மாதம் 4ம் தேதியாக இருந்த அவகாசம், 11ம் தேதியாக, ஏழு நாட்கள் நீட்டிக்கப்பட்டது; மீண்டும், மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டு, 15ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
கடைசி நாளான நேற்று, விடுபட்ட வாக்காளர்கள் சிலர், தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தங்கள் பி.எல்.ஓ.,க்களிடம் ஒப்படைத்தனர்.
கடைசி கட்ட மும்முரம் கால அவகாசம் முடிவடைந்ததால், மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், பி.எல்.ஓ.,க்கள் உள்பட தேர்தல் பிரிவினர், வருவாய்த்துறையினர் நேற்று காலை முதலே, எஸ்.ஐ.ஆர்., பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கணக்கீட்டு படிவங்களையும், விடுபடுதலின்றி ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது; ஏற்கனவே பதிவேற்றம் செய்த படிவங்களில், வாக்காளர் பெயர், 2002ல் இடம்பெற்ற வாக்காளரின் விவரங்கள் சரியாக சேர்க்கப்பட்டிருக்கிறதா என, சரிபார்த்தனர்.
இறந்தவர்கள், இரட்டைப்பதிவு உள்பட விண்ணப்பம் பெறாத வாக்காளர்களின் படிவங்களை, வழங்கப்படாத படிவங்கள் கணக்கில் சேர்த்து, பி.எல்.ஓ.,க்கள் தங்கள் முதல்கட்ட பணியை நிறைவு செய்துள்ளனர்.
தேர்தல் கமிஷன் அளித்த அவகாசம் நேற்றோடு முடிவடைந்துள்ளது. அதனால், வாக்காளர்கள் இனி, எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்க முடியாது. மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளின் மொத்த வாக்காளர்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், படிவம் பூர்த்தி செய்து வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், இதுதொடர்பாக அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியான பின்பே துல்லியமாக எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
விவரம் தராதோருக்கு நோட்டீஸ்: எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை அளிக்காதவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்படும். தகுதியுள்ள வாக்காளர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் சேரலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்காதோர், உறுதி மொழி கடிதத்துடன் கூடிய படிவம் 6 பூர்த்தி செய்து வழங்கி, புதிய வாக்காளராக சேரவேண்டும்.
புதிய வாக்காளர்: சேர்க்கை: வரும் 2026, ஜனவரி 1 ம் தேதியை தகுதிநாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள், பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். தீவிர திருத்த கணக்கீட்டு பணியின் ஒருபகுதியாக, எந்தெந்த வீடுகளில் இளம் வாக்காளர் உள்ளனர் என்கிற விவரங்களை, பி.எல்.ஓ.,க்கள் சேகரித்துள்ளனர். இளம் வாக்காளர்களுக்கு, பட்டியலில் இணைவதற்கான படிவம் - 6 வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டுவருகிறது.
19ல் வரைவு பட்டியல்: வாக்காளர்கள் சமர்ப்பித்துள்ள எஸ்.ஐ.ஆர்., கணக்கீட்டு படிவங்கள், அந்தந்த சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, வரைவு பட்டியலில் சேர்க்கப்படும். இறந்த, இரட்டை பதிவு, விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்காத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, வரும் 19 ம் தேதி, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கியும், பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள், வரைவு பட்டியல் வெளியாகும் நாள் முதலே, தங்கள் வாக்காளர் பதிவு அலுவலரிடம், மேல்முறையீடு செய்யலாம்.

