தீபாவளியின் வர்த்தகத்துக்காக காதர்பேட்டை ...காத்திருக்கிறது! ஆடை விலை உயர்த்த வேண்டிய நெருக்கடி
தீபாவளியின் வர்த்தகத்துக்காக காதர்பேட்டை ...காத்திருக்கிறது! ஆடை விலை உயர்த்த வேண்டிய நெருக்கடி
UPDATED : அக் 12, 2026 03:42 AM
ADDED : அக் 11, 2026 11:16 PM

திருப்பூர்: தீபாவளி. திருப்பூரின் உள்நாட்டுச் சந்தையான காதர்பேட்டை வழக்கமாக இந்நேரம் களைகட்டியிருக்கும். ஆனால் இந்த ஆண்டு வர்த்தகம் தாமதமாகவே சூடுபிடிக்கிறது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்ளாடைகள், டி--ஷர்ட், பனியன், லெக்கின்ஸ், பெர்முடாஸ் என அனைத்து வகை பின்னலாடைகளும் இங்கு தான் தயாராகி நாடு முழுவதும் செல்கின்றன. பண்டிகைக்கான உற்பத்தி பல மாதம் முன்பே தொடங்கி விட்டாலும், வெளிமாநில மொத்த வியாபாரிகளின் கொள்முதல் தான் சந்தையை தீர்மானிக்கும்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், கடந்த 5ம் தேதி முதல் தான் விசாரணை தொடங்கியுள்ளது. காரணம் - விலை குழப்பம். நுால் விலை, சாயக் கட்டணம், எலாஸ்டிக், எம்ப்ராய்டரி என உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. 5 முதல் 10 சதவீதம் வரை விலையை உயர்த்த நினைத்தால், வெளிமாநில வியாபாரிகள் பழைய விலைக்கே கேட்கிறார்கள்.
விலையை உயர்த்தினால் வாடிக்கை நழுவும்; பழைய விலைக்கு விற்றால் லாபம் கரையும் என்ற இக்கட்டில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும் இதே நெருக்கடி தான்.
காதர்பேட்டை செகண்ட்ஸ் பின்னலாடை வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் நாகராஜ் கூறியதாவது:
திடீரென விலையை உயர்த்தினால் வெளிமாநில வியாபாரிகள் ஏற்க மாட்டார்கள். தீபாவளி வரை பழைய கட்டணத்துக்கே ஜாப் ஒர்க் தரச் சொல்கிறார்கள். இன்னும் 2 வாரத்துக்கு பழைய விலைக்கே கொடுத்தால் சமாளித்து விடலாம். ஆயுத பூஜைக்கு பிறகு 24ம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் விற்பனை களைகட்டும் என நம்புகிறோம். கடைசி நேரம் கைகொடுக்கும்.
இவ்வாறு, நாகராஜ் கூறினார்.
காதர்பேட்டையின் வழக்கமே கடைசி நேரம் தான். அந்த நம்பிக்கையில் தான் இப்போதும் காத்திருக்கிறது சந்தை.
வளர்ந்த சந்தை
முன்பு ஏற்றுமதி நிறுவனங்களில் உபரியாக தேங்கும் ஆடைகளை மட்டுமே வாங்கி விற்று வந்த காதர்பேட்டை, இன்று சொந்தமாக ஆடைகளை உற்பத்தி செய்து மொத்த விற்பனை செய்யும் பெரும் சந்தையாக மாறிவிட்டது. குறைந்த விலையில் பின்னலாடை கிடைக்கும் என்பதால், வெளிமாநில மொத்த வியாபாரிகள் இங்கு வந்து கொள்முதல் செய்து, தங்கள் பகுதி சில்லறை கடைகளுக்கு அனுப்புகின்றனர். ஏற்றுமதி தர ஆடைகள், உள்ளாடைகள், உள்நாட்டு பின்னலாடைகள் என அனைத்தும் இங்கு கிடைக்கும்.
கடந்த விற்பனை
கடந்த 2025 தீபாவளிக்கு காதர்பேட்டையில் எதிர்பார்த்ததை விட விற்பனை அதிகரித்திருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்ததுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்தனர். பண்டிகைக்கு முந்தைய நாள் வரை விற்பனை பரபரப்பாக நடந்தது. இந்த ஆண்டு மூலப்பொருள் மற்றும் சேவைக் கட்டண உயர்வால் அதே வேகம் இருக்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
