/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு; தி.மு.க., - அ.தி.மு.க., 'கூட்டணி'
/
நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு; தி.மு.க., - அ.தி.மு.க., 'கூட்டணி'
நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு; தி.மு.க., - அ.தி.மு.க., 'கூட்டணி'
நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு; தி.மு.க., - அ.தி.மு.க., 'கூட்டணி'
ADDED : டிச 16, 2024 10:54 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - இ.கம்யூ., - மா.கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தங்கள் வார்டுகளில் பணி நடப்பதில்லை எனக் கூறி, இவர்களுடன் தி.மு.க., கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் குமார் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ் (பொறுப்பு), துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
மண் சட்டி ஏந்திய
அ.தி.மு.க.,வினர்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து, கையில் மண் சட்டியை ஏந்தி, வீடு, சொத்து வரி உட்பட உயர்த்தப்பட்ட வரியினங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டவாறே கூட்டத்திற்கு வந்தனர்.
கூட்ட விவாதம்:
லதா (அ.தி.மு.க.,): நகராட்சி பகுதியில், 1,100 மீட்டர் அளவு குடிநீர் குழாய் பதிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. நிதியையும் பில் போட்டு எடுத்துள்ளனர். பணிகளோ, 600 மீட்டருக்கு மட்டுமே நடந்துள்ளது. தரமற்ற குழாய்களை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக பதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தரமான குழாய்கள் பதித்து டெண்டர் விடப்பட்ட, 1,100 மீட்டருக்கு பணிகள் தொடர வேண்டும். சொத்து வரி,வீட்டு வரி ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
(இதற்காக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்).
தி.மு.க.,வினர்
சொன்ன காரணம்
பாரதி (தி.மு.க.,): தி.மு.க., கவுன்சிலர்கள் வார்டில் போதிய நிதி ஒதுக்கி பணிகளை துவங்குவதில்லை. அ.தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்களின் வார்டு பகுதியில் நடக்கும் பணிகளில் கால்பங்கு பணிகள் கூட எங்கள் வார்டுகளில் நடப்பதில்லை. அடிப்படைத் தேவை கூட ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. (இவ்வாறு பேசியபின், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்).
கதிர்வேல்(இ.கம்யூ.,): சொத்து வரி, வீட்டு வரிக்கு அபராதம் விதிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். குடியிருப்புக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரி இனங்களை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மன்றத்தில் உள்ள அனைத்து கவுன்சிலர்களின் வார்டு பகுதிகளிலும் ஒரே மாதிரியான பணிகளை ஒதுக்க வேண்டும். சாக்கடை கால்வாய் பணிகள் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் ஆகியவற்றில் பாரபட்சமாக நடத்தக்கூடாது.
கூட்டத்தில் பேசிய மா.கம்யூ., கவுன்சிலர் தேவராஜ், ''வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது கந்து வட்டி கொடுமையை விட மோசமாக உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக அரசு பிறப்பித்த அனைத்து வரி உயர்வை ரத்து செய்திட கட்டாயம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்று ஆவேசமாக பேசினார்.
மா.கம்யூ., - இந்திய கம்யூ., கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - இ.கம்யூ., - மா.கம்யூ., கவுன்சிலர்கள் திருப்பூர் மாநகராட்சி கூட்ட பாணியில் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
----
3 படங்கள்
திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள்.
இந்திய கம்யூ., மற்றும் மா.கம்யூ., கவுன்சிலர்கள்.