/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரைவாக 'ரீபண்ட்' கிடைக்கணும்... வணிக வரி கமிஷனரிடம் மனு
/
விரைவாக 'ரீபண்ட்' கிடைக்கணும்... வணிக வரி கமிஷனரிடம் மனு
விரைவாக 'ரீபண்ட்' கிடைக்கணும்... வணிக வரி கமிஷனரிடம் மனு
விரைவாக 'ரீபண்ட்' கிடைக்கணும்... வணிக வரி கமிஷனரிடம் மனு
ADDED : நவ 28, 2024 06:10 AM
திருப்பூர்; 'பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்குவதில் காலதாமதம் தவிர்க்க வேண்டும்,' என, வரி பயிற்சியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வணிக வரித்துறை கமிஷனர் ஜெகநாதன் நேற்று திருப்பூரில் ஆய்வு நடத்தினார். திருப்பூர் - குமரன் ரோட்டிலுள்ள வணிக வரி துணை கமிஷனர் அலுவலகத்தில், வணிக வரித்துறை இணை கமிஷனர்கள் முருககுமார் (நிர்வாகம்), அருண் (அமலாக்கம்), துணைகமிஷனர்கள் ஷோபனா, மகேஸ்வரன், நல்லரசி உள்பட வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் தலைமையில், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரவி, துணைச் செயலாளர் சுகுமார் உள்பட நிர்வாகிகள், கமிஷனரை சந்தித்து, கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனு:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு, வணிக வரித்துறை மூலம் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ரீபண்டுக்கு தாக்கல் செய்து 60 நாட்களுக்கு பின்னர் தான் பரிசீலனைக்கே எடுக்கின்றனர். இதனால், தொழில் துறையினருக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் சாய ஆலைகளுக்கு உரிய ரீபண்ட் தொகையை காலதாமதமின்றி உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்.
வணிக வரி சரகத்தில், உதவி கமிஷனர், வணிக வரி அலுவலர், துணை வணிக வரி அலுவலர் ஆகிய மூன்று அதிகாரிகள் உள்ளனர். ஒரு வர்த்தகருக்கு, மூன்று அதிகாரிகளிடமிருந்தும் தனித்தனியே ஒரே விதமான நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனால், வர்த்தகர்களுக்கு தேவையற்ற குழப்பம் மற்றும் பயம் ஏற்படுகிறது. ஏதேனும் ஒரு அதிகாரியிடமிருந்து மட்டும் நோட்டீஸ் அனுப்பவேண்டும்.
வரி தணிக்கை மற்றும் ஆய்வுகளை முறைப்படுத்த வேண்டும். அதிகாரிகள், முந்தைய தணிக்கை விவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு, புதிய தணிக்கை நடத்த வேண்டும். பின்னலாடை நிறுவன வாகனங்களை பிடிக்கும் பறக்கும்படையினர், சிறிய தவறுகளுக்கு கூட, அதிக அபராதம் விதித்து, நீண்ட நேரம் காத்திருக்கச் செய்கின்றனர். இதனால், சரக்குகள் குறித்த நேரத்துக்குள் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.