/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் துடைப்புக்காக வார்டு சபா? காங்கிரஸ் கவுன்சிலர் கொதிப்பு
/
கண் துடைப்புக்காக வார்டு சபா? காங்கிரஸ் கவுன்சிலர் கொதிப்பு
கண் துடைப்புக்காக வார்டு சபா? காங்கிரஸ் கவுன்சிலர் கொதிப்பு
கண் துடைப்புக்காக வார்டு சபா? காங்கிரஸ் கவுன்சிலர் கொதிப்பு
ADDED : அக் 30, 2025 12:54 AM

அவிநாசி: அவிநாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3ம் கட்டமாக 3, 5, 13, 10, 16 மற்றும் 17 ஆகிய ஆறு வார்டுகளில் சிறப்பு வார்டு சபா கூட்டம், நேற்று நடந்தது.
இதில், கலந்து கொண்ட அந்தந்த பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டுதல், குப்பைகளை சுத்தம் செய்தல், சாக்கடை புதுப்பித்தல், தெருவிளக்கு மற்றும் ரோடுகளை சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நகராட்சி அலுவலர்கள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் மனுக் களாக அளித்தனர்.
16வது வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் (காங்.,) நேற்று நடைபெற்ற வார்டு சபா கூட்டத்தின் தேதியும், நேரத்தையும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என நகராட்சி அதிகாரிகளிடம் கூறிவிட்டு வார்டு சபா கூட்டத்தை புறக் கணித்தார்.
முன்கூட்டியே தெரிவிக்காமல் அதிகாரிகள், கூட்டத்தை நடத்தியதால் அந்த வார்டை சேர்ந்த ஒருவர் மட்டுமே பங்கேற்றார்.
வார்டுசபா கூட்டத்தில் பங்கேற்ற ஆறு பேரில், ஐந்து பேர் தி.மு.க., வார்டு நிர்வாகிகளாக உள்ளனர்.
கவுன்சிலர் கோபால கிருஷ்ணன் கூறும்போது, ''தன்னிச்சையாக நகராட்சி அலுவலர்கள் முடிவு செய்து தேதியும் நேரத்தையும் அறிவித்து கூட்டத்தை நடத்துகிறார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு உரிய தகவலும் அளிக்காததால் பொதுமக்கள் சபா கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.
நகராட்சி அலுவலர்கள் வெறும் கண்துடைப்பு செயலாக வார்டு சபா கூட்டத்தை நடத்திச் செல்வது பொதுமக்களிடையே ஆளும் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி தருவதாக உள்ளது'' என்றார்.

