ADDED : ஜூலை 14, 2026 07:40 AM

திருப்பூர்: திருப்பூர் பகுதியில் சேகரமாகும் கழிவுகள், நீர் வழிப்பாதைகளின் ஓரங்களில் கொட்டிக் குவிக்கப்படுகிறது. இந்த செயல் மெல்ல நீர்வழிப்பாதைகளை கபளீகரம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் வீடுகள் தோறும் குப்பை கழிவுகளை துாய்மைப்பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இது தவிர இறைச்சி கடைகள், ஓட்டல்கள்; மார்க்கெட், சந்தை உள்ளிட்ட பொது இடங்கள்; தொழில் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகள் ஆகியன சேகரித்து, குப்பை தரம் பிரிப்பு மையம் மற்றும் தர வாரியாக மறு சுழற்சி பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளில் சேகரிக்கப்படும் தரம்பிரித்த மற்றும் தரம் பிரிக்கப்படாத குப்பை கழிவுகள் ஆங்காங்கே கிடைக்கும் காலி நிலங்களில் கொட்டிக் குவிக்கப்படும் செயல் நடக்கிறது.
அவ்வகையில், காலியிடங்களில் குப்பை தேக்கும் செயலுக்கு அடுத்தபடியாக ஓடை, ஆறு உள்ளிட்டவற்றின் கரைகளில் குப்பை கழிவுகளை குவிக்கும் செயல் தற்போது துவங்கியுள்ளது.
திருப்பூர் பூம்பாறை பகுதியில் கடந்து செல்லும் நல்லாற்றின் ஓரத்தில் தொழிற்சாலைக்கழிவுகள் மூட்டைகளில் கட்டி மலை போல் குவித்து வைக்கப்பட்டுக் கிடக்கிறது. அதே போல், ஏ.பி.டி. ரோட்டில் ஜம்மனை ஓடையின் கரையிலும் குப்பைகழிவுகள் பெருமளவு குவிக்கப்பட்டுக் கிடக்கிறது.
ஏற்கனவே நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் குப்பை கழிவுகள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுக் கிடந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில்அவற்றை ஒப்பந்த நிறுவனம் அங்கிருந்து அப்புறப்படுத்தியது.
தற்போது மீண்டும் இது போல் நீர் வழிப்பாதையில் குப்பை கழிவுகள் கொட்டும் செயல் நடக்கிறது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். சற்று கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் ஒரு சில நாட்களுக்குள் இந்த நீர் வழிப்பாதை முழுவதும் குப்பை கிடங்காக மாறி விடும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இதை முறையாக கண்காணித்து நீர் வழிப்பாதையில் குப்பை கழிவுகள் கொட்டும் செயலைத் தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயற்கை ஆர்வலர்கள்மத்தியில் எழுந்துள்ளது.
