ADDED : ஜூலை 12, 2025 12:48 AM

பல்லடம்; பல்லடம்- - மாணிக்காபுரம் ரோட்டில், பாரதிபுரம், பெரியார் நகர், ஜெ.கே.ஜெ., காலனி உள்ளிட்ட வீதிகளை சார்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகி வருகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், 'அத்திக்கடவு பிரதான குழாயில், பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அவ்வப்போது குடிநீர் வெளியேறி, கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது. இது தொடர்பாக, மனு அளித்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு கிடைக்கும் குடிநீரை விட இங்கு தான் அதிக அளவில் செல்கிறது,' என்றனர்.
முன்னதாக, இது தொடர்பாக அதிருப்தி அடைந்த பொதுமக்கள், வார்டு கவுன்சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிநீர் குழாய் ரோட்டின் நடுவே செல்வதால், குழாய் உடைப்பை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே இது குறித்து நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பொதுமக்கள், 'குழாய் உடைப்பை சரி செய்ய ஓராண்டு தேவையா? அதிகாரிகளை பார்க்க நாங்களும் வருகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து பேசுவோம்,' என்று கூறி கலைந்து சென்றனர்.