/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்! அமராவதி அணை நீர் இருப்பால் எதிர்பார்ப்பு
/
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்! அமராவதி அணை நீர் இருப்பால் எதிர்பார்ப்பு
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்! அமராவதி அணை நீர் இருப்பால் எதிர்பார்ப்பு
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்! அமராவதி அணை நீர் இருப்பால் எதிர்பார்ப்பு
ADDED : டிச 11, 2024 10:24 PM

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, வழக்கமாக ஜூன் மாதம் நீர் திறக்கப்பட்டு, ஏப்.,வரை வழங்கப்படும். இப்பகுதிகளில், குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
மழை பொழிவு குறைவு, நீர் நிர்வாக குளறுபடி, நீர் திருட்டு உள்ளிட்ட காரணங்களினால், சாகுபடி காலம் குறைந்துள்ளது.
நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழை தாமதம் காரணமாக, அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட,7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன், 24 தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, நவ., 6 வரை தண்ணீர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நீர் திறக்கவேண்டும்,என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கு, கடந்த, 6ம் தேதி முதல், வரும் பிப்., 24 வரை, 80 நாட்களில், 41 நாட்கள் தண்ணீர் திறப்பு, 39 நாட்கள் அடைப்பு என்ற சுற்றுக்கள் அடிப்படையில், ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 300 கனஅடி வீதம், 1,062.72 மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும்.
தகுந்த இடைவெளி விட்டு, அணை நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து, விவசாயிகள் தேவைக்கு ஏற்ப திறக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் முதல் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் சாகுபடிக்கு, 120 நாட்கள் நீர் தேவை உள்ள நிலையில், 80 நாட்கள் மட்டுமேஅரசு அனுமதியளித்துள்ளது. கூடுதல் நாட்கள் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.புதிய ஆயக்கட்டு பாசனம்
அதே போல், பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வாயிலாக பாசன வசதி பெறும், 21,867 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கும், செப்.,27 முதல்,பிப்.,9 வரை நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய ஆயக்கட்டு பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள், நோய் தாக்குதல் காரணமாக கருகியது. எனவே, இப்பகுதிகளில், புதிதாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், கூடுதலாக ஒரு மாதம் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அணையில் திருப்தியான நீர் இருப்பு உள்ளதோடு, வட கிழக்கு பருவ மழையும் பெய்து, நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பாசன காலம், மார்ச் வரை நீடிக்கும் வகையில், நீர் வளத்துறை அதிகாரிகள் நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அணை நீர்மட்டம்
அமராவதி அணையில்நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 87.60 அடி நீர் மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,830.36 கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 372 கனஅடி நீர் வரத்தும், அணையிலிருந்து பாசனத்திற்கு, 940கனஅடி நீரும் திறந்து விடப்பட்டிருந்தது.