/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டமலைக்கரை ஓடைக்கு நீர் திறப்பு
/
வட்டமலைக்கரை ஓடைக்கு நீர் திறப்பு
ADDED : ஜன 08, 2025 11:07 PM
உடுமலை, ; உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர்திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தற்போது, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு, வரும், 29 முதல், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கயம், உத்தமபாளையத்திலுள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் திறக்க அரசு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து, நேற்று காலை பிரதான கால்வாயில், வினாடிக்கு, 270 கன அடி நீர் திறக்கப்பட்டு, 86.900 கி.மீ.,ல் அமைந்துள்ள கள்ளிப்பாளையம் ெஷட்டர் வழியாக, வட்டமலைக்கரை ஓடைக்கு நீர் திறக்கப்பட்டது.
நேற்று முதல், வரும், 18ம் தேதி வரை, 240 மில்லியன் கனஅடி நீர், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் வாயிலாக, காங்கேயம் வட்டத்திலுள்ள 6,043 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். திருமூர்த்தி அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், 49.47 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 கனஅடி இருந்தது.