/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையில் இருந்து 3ம் மண்டலத்துக்கு நீர் திறப்பு; 94,362 ஏக்கர் பயன்பெறும்
/
திருமூர்த்தி அணையில் இருந்து 3ம் மண்டலத்துக்கு நீர் திறப்பு; 94,362 ஏக்கர் பயன்பெறும்
திருமூர்த்தி அணையில் இருந்து 3ம் மண்டலத்துக்கு நீர் திறப்பு; 94,362 ஏக்கர் பயன்பெறும்
திருமூர்த்தி அணையில் இருந்து 3ம் மண்டலத்துக்கு நீர் திறப்பு; 94,362 ஏக்கர் பயன்பெறும்
ADDED : ஜன 29, 2025 10:53 PM

உடுமலை; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இரண்டாம் மண்டல பாசனம், கடந்த, 4ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு நீர் திறப்பு குறித்து, திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசித்து, அந்த முடிவு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதே நேரத்தில், சோலையாறு, பரம்பிக்குளம் தொகுப்பு அணைகளில் இருக்கும் தண்ணீர், 'டனல்' வழியாக கொண்டு வரப்பட்டு, சர்க்கார்பதியில் நீர்மின் உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாயில் திறக்கப்பட்டு, திருமூர்த்தி அணைக்கு சென்றது. இதனால், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வரும் ஜூன் 13ம் தேதி வரை, 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு, 5 சுற்றுகளாக பாசன நீர் வழங்கப்பட உள்ளது.
நேற்று மாலை நடந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், பாசன சபை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள, 60 அடியில், 52.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 835 கனஅடி நீர் வரத்து இருந்தது.