/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு வரும் 29ல் நீர் திறப்பு
/
பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு வரும் 29ல் நீர் திறப்பு
பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு வரும் 29ல் நீர் திறப்பு
பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு வரும் 29ல் நீர் திறப்பு
ADDED : ஜன 20, 2025 06:16 AM

உடுமலை : உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நாளை முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக நீர் எடுக்கப்பட்டு, வரும், 29 முதல், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, கடந்தாண்டு, ஆக., 18 முதல், கடந்த, ஜன., 4 வரை, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில், காங்கயம் தாலுகா, உத்தமபாளையத்திலுள்ள வட்டமலைக்கரை ஓடை அணை பாசன பகுதிகளிலுள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் வாயிலாக, 86.900 கி.மீ., ல் அமைந்துள்ள கள்ளிப்பாளையம் ெஷட்டர் வழியாக, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் திறக்கப்பட்டு, கடந்த, 17ம் தேதி, நிறைவு செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, வட்டமலைக்கரை ஓடை வழித்தடத்தில் அமைந்துள்ள, 58 கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் நிரம்பியதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
இதனால், நேற்று காலை நிலவரப்படி, வட்டமலைக்கரை ஓடை அணையில், மொத்தமுள்ள, 24.75 அடியில், 13.62 அடி நீர்மட்டம் உயர்ந்தது. மொத்த கொள்ளளவான, 268.27 மில்லியன் கனஅடியில், 78 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 139 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நாளை நீர் திறப்பு
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, 49.3 கி.மீ., நீளமுள்ள காண்டூர் கால்வாய் வழியாக, நீர் கொண்டு வரப்பட்டு, திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டு, பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறும் நிலையில், கடந்த டிச., 31ல், காண்டூர் கால்வாயில் நீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்தன.
மலைச்சரிவால் கால்வாய்க்குள் கிடந்த பாறைகள், மண் ஆகியவை அகற்றப்பட்டு, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில், நாளை முதல், காண்டூர் கால்வாயில் நீர் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு, வரும், 29ம் தேதி முதல், பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 42.99 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,253.19 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 13 கன அடி நீர் வரத்தும், அணையிலிருந்து, குடிநீர், இழப்பு என, 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.