/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் உங்களுக்கு பூச்செடி பரிசாக கொடுக்கிறோம்!
/
குப்பை கொட்டும் உங்களுக்கு பூச்செடி பரிசாக கொடுக்கிறோம்!
குப்பை கொட்டும் உங்களுக்கு பூச்செடி பரிசாக கொடுக்கிறோம்!
குப்பை கொட்டும் உங்களுக்கு பூச்செடி பரிசாக கொடுக்கிறோம்!
ADDED : ஜூலை 15, 2025 10:38 PM

திருப்பூர்; நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயருக்கு பூச்செடிகள் வழங்கும் நுாதன போராட்டத்தை பொதுமக்கள் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஜி.என்., கார்டன் அருகிலுள்ள பாறைக்குழியில், கொட்டப்பட்டு வருகிறது.
இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் கருப்பு கொடி கட்டுதல், உண்ணாவிரதம், முற்றுகை என தொடர் போராட்டங்களை நடத்தினர்.
மக்களை சமாதானப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பலமுறை பேச்சு நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படாமல் போனது. இந்நிலையில், நேற்று காலை, மாநகராட்சி அலுவலகம் எதிரே நெருப்பெரிச்சல் பகுதி பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கேற்று, மாநகராட்சி எதிராக கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற பலரும், 'குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகம் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். மேலும், இப்பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகம் உரிய மாற்று ஏற்பாடு செய்து, பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
அதன்பின், ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பையை கொண்டு வந்து கொட்டி தங்களை அவதிப்படுத்தும், சுகாதார சீர்கேடும் ஏற்படுத்தும், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட நிர்வாகத்தை பாராட்டுவதாக கூறி, பூச்செடிகளை மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் வைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.