/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலைக்கல்லுாரி மற்றும் பள்ளிகளில் வரலாற்றை காணோம்! மாணவர்கள் பாதித்தும் நடவடிக்கை இல்லை
/
அரசு கலைக்கல்லுாரி மற்றும் பள்ளிகளில் வரலாற்றை காணோம்! மாணவர்கள் பாதித்தும் நடவடிக்கை இல்லை
அரசு கலைக்கல்லுாரி மற்றும் பள்ளிகளில் வரலாற்றை காணோம்! மாணவர்கள் பாதித்தும் நடவடிக்கை இல்லை
அரசு கலைக்கல்லுாரி மற்றும் பள்ளிகளில் வரலாற்றை காணோம்! மாணவர்கள் பாதித்தும் நடவடிக்கை இல்லை
ADDED : மே 20, 2025 11:49 PM

உடுமலை : கிராமப்புற மாணவ, மாணவியரின் முக்கிய தேர்வான வரலாற்றுத்துறை அரசு கலைக்கல்லுாரியில் இல்லை; அரசுப்பள்ளிகளிலும், காலிப்பணியிடங்கள் நிரப்பாமல், படிப்படியாக வரலாறு பாடம் மறைந்து வருகிறது. இந்நிலைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளங்கலை மற்றும் முதுகலைப்பிரிவில், இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். பொள்ளாச்சி, தாராபுரம், மூலனுார், குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாணவர்கள் இந்த கல்லுாரியை தேர்வு செய்து படிக்கின்றனர்.
இக்கல்லுாரியில் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட இளங்கலை பாடப்பிரிவுகளும், முதுகலையில் சுற்றுலாவியல் பாடங்களும் உள்ளன.
உயர்கல்வி முடிக்கும் மாணவர்கள் பலரும் குடிமைப்பணி தேர்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கும் தயாராவதற்கு செல்கின்றனர்.
இவ்வாறு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்திருப்போர், உயர்கல்வியிலும் அத்தகைய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.
அதில் முக்கிய பங்காக இருப்பது வரலாறு பாடப்பிரிவுதான். உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் இந்த பாடப்பிரிவை கேட்டு வரும் மாணவர்கள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தான், அரசு கல்லுாரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு தேவையான அடிப்படை பாடப்பிரிவுகள் கிடைக்காமல், தொலைதுாரம் சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால், பலரும் தங்களின் கனவுகளையும் விட்டுவிட்டு, வேறு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
அங்கும் இதே நிலை
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள 26 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே வரலாற்று பாடம் உள்ளது. மாணவர்கள் வரலாறு எடுத்து படிக்க நினைத்தாலும், அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதை போல், அரசு பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகள் முடக்கப்பட்டு விட்டன. இப்பாடப்பிரிவுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது, பிரச்னைக்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் கல்லுாரியில் சேர்ந்தாவது, இப்பாடத்தை தேர்ந்தெடுக்க முயற்சி செய்வோருக்கும் ஏமாற்றம் தான். அரசுக்கல்லுாரியில் வரலாற்று பாடப்பிரிவை துவங்குவதற்கு, பல சங்கங்களின் சார்பில் மனு அளித்தும், எந்த வகையிலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், வரலாறு பாடப்பிரிவு துவங்குவதால், மாணவர்கள் போட்டித்தேர்வில் எளிதில் வெற்றி பெறுவதற்கான அடிப்படையாகவும் இருக்கும்.
அரசு பணித்தேர்வுகளை எதிர்நோக்கி செல்லும், பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகளை மெய்ப்படுத்த, உடுமலை அரசு கல்லுாரியிலும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளிலும், வரலாறு பாடம் முக்கியத்துவம் பெற வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசு உருவாக்கணும்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த விஜயலட்சுமி கூறியதாவது: இன்றைய நாளில் போட்டித்தேர்வுகளில் களமிறங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகளை, அரசு உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் வரலாறு பாடப்பிரிவுகள் அதிக எண்ணிக்கையில் துவக்க வேண்டும்.
மாணவர்கள் படிக்க நினைத்தாலும், மடத்துக்குளம் வரை செல்ல வேண்டிய கட்டாயத்தால் அவர்கள் விட்டுவிடுகின்றனர். வரலாறு மற்றும் புவியியல் பாடப்பிரிவுகளுக்கு பல்வேறு துறைகளிலும், அரசுத்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இப்பகுதியினர், அரசு கல்லுாரியில் வரலாறு பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் உள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உடுமலை அரசு கல்லுாரி மற்றும் பள்ளிகளில் வரலாறு பாடத்தை துவக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.