/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரசியல்வாதிகளை நம்பவில்லை; அதிகாரிகளை நம்புகிறோம்'
/
'அரசியல்வாதிகளை நம்பவில்லை; அதிகாரிகளை நம்புகிறோம்'
'அரசியல்வாதிகளை நம்பவில்லை; அதிகாரிகளை நம்புகிறோம்'
'அரசியல்வாதிகளை நம்பவில்லை; அதிகாரிகளை நம்புகிறோம்'
ADDED : ஆக 09, 2025 11:50 PM

பல்லடம் : 'அதிகாரிகளை நாங்கள் நம்பவில்லை; உங்களை நம்புகிறோம்' என, பல்லடத்தில், பட்டா கேட்டு நடந்த அமைதி பேச்சுவார்த்தையின்போது, பொதுமக்கள் மவுனம் கலைத்தனர்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில், 1,555 குடும்பங்கள், கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டு போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் குடும்பத்தினர், பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், வரும், 11ம் தேதி, பல்லடம் -திருப்பூர் ரோடு, சின்னக்கரை பகுதியில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்திருந்தனர். பல்லடம் தாசில்தார் சபரி, அறிவொளி நகர் பொதுமக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் இதில் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அறிவொளி நகரில் உள்ள, 547 குடும்பங்களுக்கு, உடுமலை அருகே, மாற்று நிலம் தேர்வாகிவிட்டது. 1.25 சென்ட் இடம் வீட்டு வசதி வாரியம் வாயிலாக வழங்கப்பட உள்ளது. இதர, 1,008 குடும்பங்களில், 859 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகளாகவும், மற்றவர்கள், நிலம் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியவர்கள் என்பதும் தெரிய வருகிறது. எனவே, நிலத்தை வாங்கியவர்களுக்கு, உரிய அரசாணை கிடைத்தால்தான் பட்டா வழங்க முடியும். 859 குடும்பங்கள், நிலுவையில் உள்ள தொகையை செலுத்த வேண்டும். பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,' என்றனர்.
அறிவொளி நகர் பட்டா ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:
பல ஆண்டு தாமதப்படுத்தியதன் காரணமாக, வட்டி மேல் வட்டி அதிகரித்து, இன்று கூடுதல் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இழுத்தடித்ததால்தான் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். பாம்பு கடி, கழிவுநீர் தேக்கம், குப்பைகளால் துர்நாற்றம் என, வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், அறிவொளி நகரை உருவாக்கியுள்ளோம். கடந்த, 32 ஆண்டுகளாக வீட்டு வரி கட்டி வந்த நிலையில், ஆறு மாதமாக, வீட்டு வரி கட்டவும் ஊராட்சியில் பட்டா கேட்கின்றனர்.
வீட்டு வசதி வாரியத்தின் அலட்சியமே இதற்கு முழு காரணம். நிலுவைத் தொகையை செலுத்தினால் பட்டம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி கொடுங்கள். அரசியல்வாதிகளை நாங்கள் நம்பவில்லை; அதிகாரிகளான உங்களை நம்புகிறோம். ஓட்டுக்காக வந்த பலரும், பட்டா வழங்காமல் ஓட்டமெடுத்துவிட்டனர். நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்த போதும், அதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பட்டாவுக்காக உங்களுடன் வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
''வரும், 19 அல்லது 20ம் தேதி, நாங்களே உங்கள் இடத்துக்கு வந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறோம்,'' என, தாசில்தார் சபரி உறுதி கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட பட்டா ஒருங்கிணைப்பு குழுவினர், சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக கூறினர்.