ADDED : ஜூலை 22, 2025 10:02 PM
உடுமலை; குளத்து கரையில், செழித்து வளரும் பனை மரங்களை பாதுகாக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, ஜல்லிபட்டி பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே ஜல்லிபட்டியில், 20 ஏக்கர் பரப்பில், ஆலாங்குளம் அமைந்துள்ளது. மழை நீர் மற்றும் பி.ஏ.பி., பாசன கால்வாய் குளத்தில் சேகரிக்கப்பட்டு, சுற்றுப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு உதவியாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், குளம் துார்வாரப்பட்டு, கரையை வலுப்படுத்தினர். பின்னர், கிராம மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில், குளத்து கரையில், பனை விதைகள் அப்போது நடவு செய்யப்பட்டது.
இதில், பெரும்பாலான விதைகள் முளைவிட்டு, தற்போது பனை மரங்கள் வளர்ந்து வருகிறது. இம்மரங்களை பாதுகாக்க குளத்து கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பனை மரங்களை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

