/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதற்கா ஆசைப்பட்டோம்! புது பஸ் ஸ்டாண்டில் தொல்லைகள் ஏராளம்; திட்டமிடல் இல்லாமல் திணறடிக்கும் அதிகாரிகள்
/
இதற்கா ஆசைப்பட்டோம்! புது பஸ் ஸ்டாண்டில் தொல்லைகள் ஏராளம்; திட்டமிடல் இல்லாமல் திணறடிக்கும் அதிகாரிகள்
இதற்கா ஆசைப்பட்டோம்! புது பஸ் ஸ்டாண்டில் தொல்லைகள் ஏராளம்; திட்டமிடல் இல்லாமல் திணறடிக்கும் அதிகாரிகள்
இதற்கா ஆசைப்பட்டோம்! புது பஸ் ஸ்டாண்டில் தொல்லைகள் ஏராளம்; திட்டமிடல் இல்லாமல் திணறடிக்கும் அதிகாரிகள்
ADDED : ஆக 26, 2025 09:49 PM

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் பஸ் ஸ்டாண்டில் நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு பகுதி பயன்படுத்தாமல் வீணாக உள்ளது. ஆறு ரோடுகள் சந்திக்கும் பிரதான ரோட்டை கடக்க வேண்டிய நிலை, நிழற்கூரை, இருக்கை என அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணியர் தவித்து வருகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, கோவை, மதுரை, மூணாறு, திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து, மப்சல் பஸ்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் நிலையில், நெரிசலை குறைக்கும் வகையில், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
இங்கு, குறைந்த அளவிலான ரேக்குகள் மட்டுமே அமைக்கப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து, பொள்ளாச்சி, பழநி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த மப்சல் பஸ்கள் மற்றும் கிழக்கு பகுதிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது.
ஆனால், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட், எந்த பஸ்களும் நின்று செல்ல அனுமதிக்காமல் வீணாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல் பைபாஸ் ரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் மற்றும் வெளியேறும் பஸ்கள் அனைத்தும், குறுகிய வழித்தடத்தில் எதிர், எதிரே செல்லும் நிலை உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும், பயணியர் வெளியேற அமைக்கப்பட்ட வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றப்பட்டுள்ளதால், பஸ்கள் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் ஒரே வழித்தடத்தில், பயணியரும் வெளியே வரும் அவல நிலை உள்ளது.
மேலும், ஏற்கனவே உள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்து, கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பயணியர் மற்றும் வெளியேறும் பயணியர், பைபாஸ்ரோடு, பழநி ரோடு, ஐஸ்வர்யா நகர், அனுஷம் நகர், ராஜேந்திரா ரோடு, பொள்ளாச்சி ரோடு சந்திக்கும் ரவுண்டானாவை கடக்க வேண்டியுள்ளது.
ரோடுகளில் அதிவேகமாக வரும் வாகனங்கள், ரோட்டை கடக்கும் பயணியர் என கடும் பாதிப்பும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. கூடுதல் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டால், நெரிசல் குறைவதற்கு பதில், பாதிப்பு அதிகரித்துள்ளது.
மறு புறம் ஏற்கனவே மப்சல் மற்றும் டவுன் பஸ்கள் நின்றிருந்த பகுதி, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, பயன்படுத்தாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
அதே போல், கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகள் காத்திருக்க, மேற்கூரை வசதியில்லாததோடு, இருக்கை, காத்திருக்க இடம் ஒதுக்காமல் உள்ளதால், பயணியர் வெயிலிலும் மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
அதே போல், குடிநீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு பகுதி பஸ் ஸ்டாண்டில் அதிக பஸ்களை இயக்கியும், மறு புறம் பஸ் ஸ்டாண்டை வீணாக வைத்திருப்பதற்கும், போக்குவரத்துக்கழகம் சார்பில், கண்காணிப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறி, ஒரே பகுதியில் பஸ்களை கொண்டு சென்று நெரிசல் ஏற்பட காரணமாக உள்ளனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் வகையில் சுரங்க வழித்தடம், தற்காலிகமாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மப்சல் பஸ்கள் மட்டும் இயக்கவும், ஏற்கனவே உள்ள பஸ் ஸ்டாண்டில், வீணாக உள்ள பகுதியிலிருந்து டவுன் பஸ்களை இயக்கவும் வேண்டும்.

