ADDED : நவ 16, 2025 12:19 AM
பொங்கலுார்: முன்பெல்லாம் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்வது வழக்கம். ஒரு மாதம் முன்பே பணிகளைத் துவக்கி விடுவர். தற்போது விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் நாற்று உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். அதை பலர் ஒரு தொழிலாகவே மேற்கொள்கின்றனர். நாற்றுப் பண்ணையாளர்கள் பட்டம் துவங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே நாற்று உற்பத்தியை துவக்கி விடுவர்.
இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை நன்றாக பெய்திருந்தால் குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். விவசாயிகள் கார்த்திகைப் பட்ட சாகுபடி பணியை சுறுசுறுப்பாக மேற்கொள்ள வசதியாய் இருந்திருக்கும். மழை பொய்த்துப் போனதால் நடப்பாண்டு மாவட்டத்தில் கார்த்திகை பட்ட காய்கறி சாகுபடி பரப்பு வெகுவாக குறையும் சூழல் நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் காய்கறி நாற்றுக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நாற்றுப் பண்ணையாளர்கள் பெரிய அளவில் நாற்று உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

