/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலக மேம்பாட்டு கோரிக்கைகள் என்னாச்சு? விரக்தியில் கிராமப்புற இளைஞர்கள்
/
நுாலக மேம்பாட்டு கோரிக்கைகள் என்னாச்சு? விரக்தியில் கிராமப்புற இளைஞர்கள்
நுாலக மேம்பாட்டு கோரிக்கைகள் என்னாச்சு? விரக்தியில் கிராமப்புற இளைஞர்கள்
நுாலக மேம்பாட்டு கோரிக்கைகள் என்னாச்சு? விரக்தியில் கிராமப்புற இளைஞர்கள்
ADDED : பிப் 04, 2025 11:51 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள கிராமப்புற நுாலகங்களில், போட்டித்தேர்வர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், 20க்கும் மேற்பட்ட கிளை, பகுதி நேர நுாலகங்கள் மற்றும் ஊர்ப்புற நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நுாலகங்களில், ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், போதிய வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
தொடர் கோரிக்கையால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சில நுாலகங்கள் மட்டும் முழு நேர நுாலகமாக, சில ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டன.
ஆனால், புத்தகங்கள் ஒதுக்கீடு, கழிப்பிடம் உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு, இருக்கை வசதிகள் அதிகரித்தல் போன்ற கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை.
குறிப்பாக, நுாலகத்தை அதிகம் பயன்படுத்தி வரும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களின், கோரிக்கைகளை மாவட்ட நுாலக ஆணைக்குழு கண்டுகொள்வதே இல்லை.
தனியிடம் அவசியம்
அரசு அறிவிக்கும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, நுாலகத்தில் தனியிடம் ஒதுக்குவது அவசியமாகும்.
நகர்ப்புற நுாலகங்கள் சிலவற்றில் மட்டும், போட்டித்தேர்வர்களுக்கு, தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற நுாலங்களில், தேர்வர்களின் நிலை பரிதாபமாகி விடுகிறது. நாள்முழுவதும், குறிப்புகளை எடுக்க, பல இடங்களில், மாறி... மாறி... உட்கார வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது.
அனைத்து நுாலகங்களிலும், போட்டித்தேர்வர்களுக்கு தனியிடம் ஒதுக்கி, தேவையான புத்தகங்களையும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, பல கோரிக்கைகள், நீண்ட காலமாக தெரிவிக்கப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவை, மாவட்ட நிர்வாகம், நுாலக ஆணைக்குழு ஆகியோருக்கு சென்று சேர்வதில்லை.
எனவே, அனைத்து நுாலகங்களிலும், வாசகர் வட்ட கூட்டம் நடத்தும் போது, நுாலக ஆணைக்குழு சார்பில், ஒருவர் பங்கேற்பதால், பிரச்னைகள் நேரடியாக தெரியவரும்.
மேம்பாட்டுக்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி பெற, நுாலகத்துறையினருக்கும் பணிகள் எளிதாகும்.
மேலும், நுாலகங்களில் நிலவும் பிரச்னைகளை கண்டறிய, மாவட்ட நுாலக அலுவலர் உட்பட அதிகாரிகளின், இ-மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றையும், நுாலகங்களில், எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது.