/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாங்கள் என்ன மத்தளமா? பி.எல்.ஓ.,க்கள் தவிப்பு
/
நாங்கள் என்ன மத்தளமா? பி.எல்.ஓ.,க்கள் தவிப்பு
ADDED : நவ 21, 2025 06:20 AM

பல்லடம்: அதிகாரிகள் ஒருபுறம்; அரசியல் கட்சியினர் மறுபுறம் என, மாறி மாறி நெருக்கடி கொடுத்து வருவதால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 'இடி வாங்கும் மத்தளம் போல்' மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பூத் வாரியாக சென்று, வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். டிச., 4ம் தேதியுடன் இப்பணிகளை முடிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர்.
வாக்காளருக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள, 2002 மற்றும் 2005ம் ஆண்டு விவரங்கள் பெரும்பாலான வாக்காளர்களிடம் இல்லை. மேலும், பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாமலும், சரியான விவரங்கள் பெற முடியாமலும், தெரு நாய்கள் தொல்லை உள்ளிட்டவற்றாலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், களப்பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பெரும்பாலும் பெண்களாகவே உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் வேகத்துக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை.
முறையான பயிற்சி வழங்காமல், போதிய பணியாளர்கள் இல்லாமலும், படிவங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஒருபுறம் நெருக்கடி கொடுக்க; வார்டு பகுதிகளில், பல்வேறு அரசியல் கட்சியினரும் நெருக்கடி தருவதால், படிவங்களை பூர்த்தி செய்து பெறுவதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
குறைந்த காலக்கெடு, பணியாளர் பற்றாக்குறை, அதிகாரிகள், அரசியல்வாதிகளின் நெருக்கடி, பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்களால், வாக்காளர்களிடம் சரியான விவரங்களை சேகரிக்க முடியாமலும், சேகரித்த வாக்காளர்களின் விவரங்கள் சரியானவைதானா? என்பதை உறுதி செய்ய முடியாமலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், வாக்காளர் சீராய்வு பணிகள் திட்டமிட்ட தேதியில் நிறைவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

