ADDED : பிப் 04, 2025 01:07 AM
திருப்பூர்; அவிநாசி வட்டார நகர காங்., கமிட்டி சார்பில், கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரத்தில் நடக்கும் கூட்டத்தில் கிராம நிர்வாகிகளை வரவழைத்திருப்பது ஏன்... நகர, மூத்த நிர்வாகிகளுக்கு கூட்டம் தொடர்பாக ஏன் அழைப்பு வரவில்லை என, வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் பழனியப்பனிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு, சேர்வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.
முன்னாள் நகர பொறுப்பாளர் பொன்னுக்குட்டி கூறுகையில், ''பழங்கரை கிராமத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு நகர பொறுப்பு வழங்கப்படுகிறது. தேவையில்லாத நிர்வாகிகளை நியமித்தால், கட்சி உடையும். பொறுப்பு வழங்குவது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கூட்டம் நடத்துவது குறித்து கூட நகர கமிட்டி நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லை.
இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, வடக்கு மாவட்ட தலைவர் அது என்னோட விருப்பம்,'' என தெரிவித்து விட்டு, கூட்டத்தை முடித்து விட்டார். அடுத்த முறை அவிநாசி நகர அளவில் கூட்டம் நடத்தினாலும், நாங்கள் காரணம் கேட்போம்' என்றார்.
வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத்பழனியப்பன் கூறுகையில், ''மாவட்ட தலைவர் எந்த சட்டசபை தொகுதியை சேர்ந்தவர்களையும் வட்டார தலைவர் உள்ளிட்டபொறுப்புகளில் நியமிக்கலாம். புகார் தெரிவித்தவர் காங்., கட்சியின் அடிப்படை கட்டமைப்பு விதிகளை தெரிந்து விட்டு பேசினால்நல்லது,' என்றார்.

