ADDED : மார் 18, 2025 05:11 AM

திருப்பூர் : திருப்பூர் குமரன் ரோடு, டவுன்ஹால் ஸ்டாப்பில் 'பஸ்பே' அமைத்தும் பயனில்லாமல் உள்ளது. பஸ்கள் நடுரோட்டில் நிற்பதால், பயணிகள் ஓடிச் சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது.
பஸ்கள் நடுவழியில் நிற்பதை தடுக்க, நகரில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள, முக்கிய சந்திப்புகளில் 'பஸ்பே' அமைக்கப்பட்டது. பஸ்கள் நிற்க தனியிடம் ஒதுக்கி, சாலையில் இருந்து ஓரமாக தள்ளி நிரந்தரமாக 'பேரிகார்டு' நிறுவப்பட்டு, பஸ்கள் அவ்விடத்தில் நின்று செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.
நகரின் பிஸியான சந்திப்புகளில் முக்கியமானதாக டவுன்ஹால் ஸ்டாப் உள்ளது. திருப்பூர் வடக்கு பகுதியில் இருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் மட்டுமின்றி, கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், சத்தி, அந்தியூர், கோபி உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவில்வழி மற்றும் தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்கள், டவுன்ஹால் ஸ்டாப்பில் நின்று செல்ல 'பஸ்பே' அமைக்கப்பட்டது.
ஆனால், ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே வேகமாக இறங்கும் டவுன், சர்வீஸ் பஸ்கள் சாலையின் இடதுபுறமாக வந்து, பஸ்பே இடத்தில் நிற்பதில்லை. மாறாக நடுரோட்டில் பஸ்களின் வேகத்தை குறைந்து பயணிகளை இறக்கி, ஏற்றுகின்றனர். இதனால், பாலத்தில் தொடர்ந்து வரும் வாகனங்கள் தேக்கமாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
டவுன்ஹால் பயணிகள் நிழற்குடை, ஸ்டாப் அருகே நிற்கும் பயணிகள் 'பஸ்பே' வை தாண்டி, ஓடிச் சென்று நடுரோட்டில் பஸ் ஏற வேண்டிய சூழல் உள்ளது.
விபத்து ஏற்படும் முன், 'பஸ் பே'க்குள் அனைத்து பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். அருகிலேயே வடக்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது; போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.