/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை போலீஸ் ஸ்டேஷனை பிரிப்பதற்கான கருத்துரு என்னாச்சு! குற்றத்தடுப்பு பணியில் தொய்வால் மக்கள் கவலை
/
உடுமலை போலீஸ் ஸ்டேஷனை பிரிப்பதற்கான கருத்துரு என்னாச்சு! குற்றத்தடுப்பு பணியில் தொய்வால் மக்கள் கவலை
உடுமலை போலீஸ் ஸ்டேஷனை பிரிப்பதற்கான கருத்துரு என்னாச்சு! குற்றத்தடுப்பு பணியில் தொய்வால் மக்கள் கவலை
உடுமலை போலீஸ் ஸ்டேஷனை பிரிப்பதற்கான கருத்துரு என்னாச்சு! குற்றத்தடுப்பு பணியில் தொய்வால் மக்கள் கவலை
ADDED : ஆக 17, 2025 10:14 PM

உடுமலை தாலுகா, 2009ல், இரண்டாக பிரிக்கப்பட்டு, வருவாய் கோட்டமாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பகுதியை தலைமையிடமாகக்கொண்டு மாவட்டம் உருவாக்கவும், கோரிக்கை எழுந்து வருகிறது.
இவ்வாறு, நிர்வாக ரீதியாக பல்வேறு துறைகள் மேம்படுத்தப்பட்டாலும், போலீஸ் துறையில் மட்டும் நீண்ட காலமாக எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
தற்போது, உடுமலை ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள 18 தாய் கிராமங்களும், அதற்குள், 17 சிறிய கிராமங்களும் உள்ளன.
நகரில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில், புதிதாக பல்வேறு லே-அவுட்கள் அமைக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன; தொழில்களும், இதர வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதற்கேற்ப சிறு குற்றங்களின் எண்ணிக்கையும், சமூக விரோத செயல்களும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் வகையில், உடுமலை ஸ்டேஷனில், கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
பிற நகரங்களில், நகருக்கென தனியாக ஒரு போலீஸ் ஸ்டேஷனும், நகரை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் என கூடுதலாக ஸ்டேஷனும், தேவையான போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாருக்கு பணிச்சுமை ஆனால், உடுமலையில், நகரம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களையும் ஒரு ஸ்டேஷன் போலீசாரே நிர்வகிப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
தற்போது, உடுமலை ஸ்டேஷனுக்கு, 2 இன்ஸ்பெக்டர், 4 எஸ்.ஐ., மற்றும் இதர போலீசார் உள்ளிட்ட 71 பணியிடங்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய நகரம், பரந்து விரிந்த எல்லை கிராமங்களில், குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்த பணியிடங்கள் போதுமானதாக இல்லை.
இதற்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களில், நாள்தோறும், சராசரியாக, 25 போலீசார் அயல் பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ள சூழல் உள்ளது. இதனால், முக்கியமான, 7 'பீட்'களிலும், ரோந்து செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
பணியிடங்களுக்கு அதிகளவு பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளது சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.
இரவு ரோந்து மற்றும் குற்றங்களின் போது சம்பவ இடங்களுக்கு அவர்களை அனுப்ப முடிவதில்லை. இதனால், பிற போலீசாருக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகரிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலை உடுமலை பகுதியில் அமைந்துள்ளதால், விபத்து சம்பவங்களின் போது, சம்பவ இடத்துக்கு செல்வதிலும் போதிய போலீசார் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், சட்டம்-ஒழுங்கு சார்ந்த பணிகளுக்கும் போதிய போலீசார் இருப்பதில்லை. சமீபத்தில், கணியூர், குமரலிங்கம் ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் உடுமலை ஸ்டேஷன் பிரிப்பு குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
கடந்த, 2021ல், உடுமலை போலீஸ் ஸ்டேஷனை பிரிப்பது குறித்து, கருத்துரு பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளாகியும், மக்கள் மற்றும் போலீசாரின் பிரச்னைகள் குறித்து, அரசு கண்டுகொள்ளாதது அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாகியுள்ளது.