/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பட்ஜெட் எப்படி இருக்கும்?
/
மாநகராட்சி பட்ஜெட் எப்படி இருக்கும்?
ADDED : பிப் 24, 2024 12:14 AM
திருப்பூர்;மாநகராட்சி பட்ஜெட்டில், இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது.
வரும் 2024-25ம் நிதியாண்டுக்கான திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட், வரும் 27ம் தேதி காலை 10:00 மணிக்கு தாக்கலாகிறது.
நேற்று நடந்த பட்ஜெட் குறித்த முன் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் மாநகராட்சி நிதிக்குழு தலைவர் கோமதி, மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துதல்; அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள்; வருவாய் இனங்கள் அதிகரித்தல்; நமக்கு நாமே திட்டம் போன்றவற்றில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்தல்; முன்னோடி மாநகராட்சியாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை; கழிவுகள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல், சுகாதார மேம்பாடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.மாநகராட்சி சார்பில் மக்கள் உடல் நலன் பேணும் வகையில் உடற்பயிற்சி கூடம்; அறிவுபூர்வமான செயல்பாடுகள் மேம்படுத்த அறிவியல் பூங்கா; கல்வி மேம்பாட்டுக்காக பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிட வசதிகள் மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்தில் மாற்றம் செய்தல் போன்ற புதிய திட்டங்கள் இடம் பெறும்.மாநகராட்சி விரிவாக்கம் எதிர்பார்க்கப்படும் நிலையில், விசாலமான புதிய மாநகராட்சி அலுவலக கட்டடம் அமைக்கும் திட்டம் உள்ளது. மேலும், பொதுமக்கள் தரப்பு எதிர்பார்ப்புகள், தேவைகள் குறித்தும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த அனைத்து தொழில் அமைப்புகளிடமும் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான திட்டங்கள்; ஆக்கபூர்வமான திட்டங்களும் இதில் இடம் பெறும்.நுணுக்கமாக, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக முழுமையான திட்டங்கள் கொண்டதாக இந்த பட்ஜெட் அமையும். நகரின் வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதி ஆதாரங்களை முழுமையாகப் பெற்று பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.