/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் - 2.0' என்னாச்சு?
/
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் - 2.0' என்னாச்சு?
ADDED : ஆக 06, 2025 10:58 PM
திருப்பூர்; கடந்த, 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' திட்டம் தொடர்பான அதிகாரிகளின் செயல்பாடு, வேளாண் துறையினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசின் வேளாண் துறை சார்பில், 2023ல் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
அதில் அறிவிக்கப்பட்ட வாறு, 'உழவர் தொடர்பு அலுவலர், 2.0' என்ற பெயரில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை உட்பட வேளாண் துறை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒரே துறையின் கீழ் இணைக்க திட்டமிடப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது.
மாவட்ட வாரியாக, தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் விவசாய பரப்பு, துறை சார்ந்து பணியில் உள்ள அலுவலர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.
'இத்திட்டத்தின் படி, மூன்று முதல் நான்கு கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவார்.
சம்பந்தப்பட்ட துறையினரை ஒருங்கிணைத்து, பயிர் சாகுபடி துவங்கி விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழில்நுட்ப பயிற்சி, சந்தை வாய்ப்பு என, பயிர் வளர்ச்சிக்குரிய முழுப்பொறுப்பையும் அந்த அலுவலர் தான் ஏற்க வேண்டும்' என்பது போன்ற பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இதனால், 'விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்ந்த அனைத்து துறைகளின் திட்டங்களும் சென்று சேரும்' என, வேளாண் துறையினர் நம்பிக்கை யளித்தனர்.
இருப்பினும், அரசாணை பிறப்பித்து, 3 ஆண்டு கடந்தும், இதுவரை திட்டம் அமலுக்கு வராத நிலையில் வேளாண் துறை இயக்குனரகத்தின் செயல்பாடு, வேளாண் துறை அலுவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.